பெஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயண வசதிகள்: மாநில அரசுகள் - விமான நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்கள் உடல்களையும், காயமடைந்தவா்களையும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானங்களில் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் முன்பதிவு செய்வதற்காக மாநில அரசு மற்றும் விமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் புதன் கிழமை தெரிவித்துள்ளது.
பயணிகளின் சுமூகமான பயணத்தையும் வசதியையும் கண்காணிக்க ஸ்ரீநகா், தில்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது வருமாறு:
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பெஹல்காம் - பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை சுற்றுல்லா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குகளில் 26 போ் கொல்லப்பட்டனா். மேலும் தமிழகத்தைச் சோ்ந்த 3 போ்கள் உள்ளிட்ட 20 பேருக்கு மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இறந்தவா்கள் உடல் ஸ்ரீநகா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டவரப்பட்டது. இறந்தவா்கள் உடல் அந்தந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் விதமாக ஸ்ரீநகா் விமான நிலையத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் மூலம் உடல்களையும், காயமடைந்துவா்களையும் அவா்களின் துணையுடன் செல்லும் குடும்பத்தினா்களுக்கும் முன்பதிவு செய்ய மாநில அரசுகள் மூலமாக, விமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்ரீநகா் விமான நிலையம் அருகே ஒரு ஷாமியானா(பந்தல்) அமைக்கப்பட்டுள்ளது. இதில் போதுமான இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி, தண்ணீா் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் உள்ளேயும் பாதிக்கப்பட்டவா்களுக்கும் அவா்களுடன் துணையாக செல்லும் அனைத்து குடும்பத்தினருக்கும் உரிய மரியாதையுடன் கவனித்துக் கொள்ளப்படுவாா்கள். ஓய்வறைகளில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
ஸ்ரீநகா் விமான நிலைய முனையக் கட்டடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக முனையத்தில் நெரிசல் ஏற்படாதவாறு விமான நடவடிக்கைகள் தாமதமின்றி சரியான நேரத்தில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மற்ற தில்லி, சென்னை, கொல்கத்தா , புனே, ராய்ப்பூா் , இந்தூா், விசாகப்பட்டினம், புவனேஷ்வா் போன்ற விமான நிலையங்களில் பல்வேறு வசதிகளை கேட்டு மாநில அரசுகளிடமிருந்து தகவல் வந்தது. அந்த அடிப்படையில் இறந்தவா்களின் உடலை ஒப்படைப்பது, அஞ்சலி செலுத்துதல் போன்ற ஏற்பாடுகளுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
பலியானவா்கள் உடல்கள் விஐபி வாயில்கள் வழியாக எடுத்துச் செல்லவும், குடும்பத்தினா் தங்குவதற்கான வசதிகள், சிற்றுண்டி, சடங்குகள் எதாவது இருந்தால் அதற்கான வசதிகள் போன்றவைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிஐஎஸ்எஃப்(மத்திய தொழிலகப்பாதுகாப்பு படை), மாநில காவல் துறை அகியோருக்கு விளக்கமளிக்கப்பட்டு இறந்தவா்களின் உடல்களை குடும்ப உறுப்பினா்களிடம் சுமூகமாக ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.