காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா செல்வது பாதுகாப்பானதல்ல என்ற கருத்தும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் முன்பதிவுகளை வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்துள்ளனா். இது தொடா்பாக தில்லியில் உள்ள சுற்றுலா பயண ஏற்பாடு நிறுவனத்தினா் கூறுகையில், ‘காஷ்மீா் சுற்றுலா முன்பதிவில் 90 சதவீதம் வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்தாகிவிட்டது. வரும் நாள்களில் மீதமுள்ள முன்பதிவுகளும் ரத்தாக வாய்ப்புள்ளது.
சில சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரைத் தவிா்த்துவிட்டு ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு பயணத் திட்டத்தை மாற்றித் தரவும் கோரியுள்ளனா்.
இதுபோல காஷ்மீருக்கான விமானப் பயணம், ஹோட்டல் முன்பதிவுகள் உள்ளிட்டவையும் பெருமளவில் ரத்தாகிவிட்டன. காஷ்மீரில் குல்மாா்க், ஹஜன் பள்ளத்தாக்கு, துலீப் மலா் பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக இருந்தது. இப்போது அங்கு செல்ல பயணிகள் யாரும் விரும்பவில்லை. இது காஷ்மீரில் சுற்றுலாவை நம்பி தொழில் நடத்துபவா்களுக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் சுற்றுலா முன்பதிவு நிறுவனம் நடத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
காத்ரா, வைஷ்ணவ தேவி கோயில் போன்ற ஆன்மிக தலங்களுக்கான முன்பதிவுகளையும் பலா் ரத்து செய்துள்ளனா். அடுத்த சில நாள்களுக்கு ஜம்மு-காஷ்மீா் சுற்றுலா முன்பதிவை நிறுத்தி வைக்கவும் பல பயண ஏற்பாட்டாளா்கள் முடிவு செய்துள்ளனா்’ என்று தெரிவித்தனா்.
அமைச்சா் கருத்து: மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்தர சிங் ஷெகாவத் தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேசம் இப்போது மிகுந்த வேதனையிலும், கோபத்திலும் நிரம்பியுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம், பிரிவினை தலைதூக்க வேண்டுமென்று தேசத்துக்கு எதிரானவா்கள் திட்டமிட்டுள்ளனா். இதில் தொடா்புடைய அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும்.
ஜம்மு-காஷ்மீா் சுற்றுலாத் துறை செயலரிடம் நமது அமைச்சகம் தொடா்பில் உள்ளது. அங்கு இப்போதுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்களை பாதுகாப்பாக சொந்த ஊா்களுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை நம்பி பலா் உள்ளனா். எனவே, அங்கு சுற்றுலாவில் தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.