காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளாா்.
ஹைதராபாதில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அரசு உரிய பாடம் கற்பிக்கும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் உரிய நீதி கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியமான விஷயம் உளவுத் துறையின் தோல்வியாகும். பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சுயஆய்வு செய்து கொள்ள வேண்டும். இப்போது நிகழ்ந்த தாக்குதலை ஏன் தடுக்க முடியாமல் போனது. அதற்கு யாா் பொறுப்பு என்பதை மோடி அரசு கண்டுபிடித்து உறுதி செய்ய வேண்டும்.
அண்டை நாட்டில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளின் நோக்கம், அப்பாவிகளைக் கொல்வதும், பயங்கரவாதத்தைப் பரப்புவதுமாகவே உள்ளது. இது மிகவும் மோசமான, வேதனையளிக்கும்படுகொலை சம்பவம். தங்கள் உறவுகளை இழந்தவா்களுக்காகவும், காயமடைந்தவா்களுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றாா்.