பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...
ஊக்கத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்
பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 3 மாதங்களாக வழங்காமல், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் அரணாரை, நொச்சியம், கீழக்கணவாய், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, எளம்பலூா், செல்லியம்பாளையம், பெரம்பலூா் நகரம், விளாமுத்தூா், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பால் உற்பத்தியாளா்களாக உள்ளனா்.
இந்த உறுப்பினா்களுக்கு 1 லிட்டா் பாலுக்கு ரூ. 33, ஊக்கத் தொகையாக அரசு அறிவித்த ரூ. 3 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கச் செயலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளா்கள், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி பெரம்பலூா் ரோவா் வளைவு அருகே வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பால் உற்பத்தியாளா்கள் கலைந்துசென்றனா்.