எஸ்ஸார் குழும இணை நிறுவனர் காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!
வணிக பயன்பாட்டு வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷஷிகாந்த் ரூயியா இன்று(நவ. 26) காலமானார். அவருக்கு வயது 81.
எஸ்ஸார் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த தொழிலதிபர் ஷஷிகாந்த் ரூயியா, இந்தியாவில் பன்னாட்டு நிறுவன தொழில் கட்டமைப்பின் சீரமைப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தவர். இவரால் நிறுவப்பட்ட எஸ்ஸார் குழுமம், இன்று உலகளவில் பன்னாட்டு நிறுவனமாக பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்ல பதிவில் கூறியிருப்பதாவது, “ஷஷிகாந்த் ரூயியா அவர்கள் தொழிலுலகில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர். அவருடைய தொலைநோக்கு சிந்தனையுடனான தலைமைப் பண்பும், ஒப்பிலா ஈடுபாடும் இந்தியாவில் வணிகக் கட்டமைப்பை மாற்றியுள்ளது.
புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கும் அவர் உயர்தர நிலையை அமைத்துக் கொடுத்தவர். புதுப்புது யோசனைகளைக் கொண்டு விளங்கியவர், நமது நாட்டை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றியே எப்போதும் ஆலோசித்துக் கொண்டிருந்தவர்.
இந்த நிலையில், ஷஷிகாந்த் ரூயியா அவர்களின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.