குன்னியூர் மதுக்கடை! எதிர்த்தும் ஆதரித்தும் போராட்டம்! என்ன செய்யப் போகிறது அரசு...
டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களுக்குப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் (நவ.27)நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்குத் தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 2 நாள்களில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரும். புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போது, இது புயலாக மாறுவது தொடர்பாக உறுதிசெய்யப்படும்.
டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரிடர் மீட்புப்படையினர் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குப் பேரிடர் மீட்புப்பணி குழு விரைந்துள்ளது. 5 பேரிடர் மீட்புப்பணியில் சுமார் 150 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.