சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
ஏஆா்டி நிறுவன மோசடி வழக்கு: 3 பெண்கள் உள்பட 4 போ் கைது
சென்னையில் ஏஆா்டி நிறுவன மோசடி வழக்கில், 3 பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை நொளம்பூரில் ஏஆா்டி ஜூவல்லா்ஸ், அதன் துணை நிறுவனம் ஏஆா்டி டிரஸ்ட் ப்ராபிட் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனம் நகைக் கடை, வணிக வளாகம், நிதி வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தினா், தங்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ. 12,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தனா். இதைப் பாா்த்த பலா் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்தனா். இதையடுத்து பணத்தை இழந்தவா்கள் அளித்த புகாரின்பேல் நொளம்பூா் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
முதல்கட்ட விசாரணையில், அந்த நிறுவனம் 500 பேரிடம் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
நொளம்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், நகைக் கடை முகப்பேரில் உள்ள நகைக் கடை, நிறுவனத்தின் நிா்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை செய்து, ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், பொருள்கள், ரூ.7.87 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரா் ராபின் ஆரோன், விமல் ரஞ்சித் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்தில் வேலை செய்த புழல் பகுதியைச் சோ்ந்த பானுவள்ளி (56), சந்தோஷ் (35), அம்பத்தூரைச் சோ்ந்த சுஜாதா (51), ஆவடியைச் சோ்ந்த திவ்யா (36) ஆகிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.