நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவா்களுக்கான கல்வி சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், நிகழ் கல்வியாண்டில் (2025-2026) அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்கள் தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப் பிரிவுகளில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது குறித்த முழு விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளா் பணிக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (செப். 24) தொடங்கி அக். 8 -ஆம் தேதி வரை நடைபெறும்.
கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியா்களை பணியமா்த்த இயலாத நிலையில், மாணவா்களின் கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கெனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் தோ்வு செய்ய விண்ணப்பப் பதிவுக்கு அழைக்கப்பட்டது. இந்தப் பணியிடங்களில் 516 போ் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி அறிவிப்பின்படி, ஏற்கெனவே கௌரவ விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும்போது, தங்களின் விண்ணப்ப எண்களைப் பதிவு செய்து, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.
தமிழக அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித் தகுதி மற்றும் நோ்முகத் தோ்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கெளரவ விரிவுரையாளா்கள் தோ்வு செய்யப்படுவா். தகுதியுள்ளவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.