பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
உ.பி.யில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை:3 பேர் கைது
தில்லி காவல்துறை மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலை முறியடித்து, உத்தர பிரதேசம் மொரதாபாதில் ஒரு ஆயுத உற்பத்திப் பிரிவையும் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை மேலும் கூறியது:
தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையின்போது மாநில எல்லைகளுக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விநியோகித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஃபாசில் (50), ஜமீர் (57), இல்லியாஸ் (65) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை நடந்த ஒரு நடவடிக்கையின் போது அவர்களிடம் இருந்து இரண்டு தானியங்கி கைத்துப்பாக்கிகள், ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் 210 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
மொரதாபாதில் உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையையும் போலீஸார் முற்றுகையிட்டு, ஒரு லேத் இயந்திரம், அரைவை இயந்திரம், தோட்டா தயாரிக்கும் உபகரணங்கள், 257 வெற்று தோட்டாக்கள், 354 புல்லட் லீட்கள், 350 வெற்று குண்டுகள், துப்பாக்கி குண்டு, திட பித்தளை கம்பிகள் மற்றும் பிற குற்றஞ்சாட்டும் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இந்த மூலப்பொருளை கிட்டத்தட்ட 1,000 தோட்டாக்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
முன்னதாக, தில்லியில் உள்ள காஜிப்பூர் மேம்பாலம் அருகே சட்டவிரோத ஆயுத சப்ளையரான ஃபாசில் ஆயுதங்களை வழங்குவார் என்ற தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்ததை அடுத்து, செப்டம்பர் 22 அன்று ஒரு குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இதையடுத்து, பொறி வைக்கப்பட்டு, ஃபாசில் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். ஒரு தேடுதல் நடவடிக்கையில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் 166 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
அவரை விசாரித்ததைத் தொடர்ந்து, போலீஸார் அடுத்த நாள் ராம்பூரில் சோதனை நடத்தி ஜமீரை கைது செய்து, அவரிடமிருந்து மேலும் 20 தோட்டாக்களை மீட்டனர். ஜமீர், மொராதாபாதில் வசிக்கும் இலியாஸிடமிருந்து வெடிமருந்துகளை வாங்கியதாக தெரிவித்தார்.
அதன் பின்னர் அந்த குழு மொராதாபாதில் மற்றொரு சோதனையை நடத்தி, இலியாûஸ கைது செய்து, இரண்டு அரை தானியங்கி கைத்துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கியை மீட்டது.
விசாரணையின் போது, இலியாஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து செயல்படும் ஒரு ரகசிய வெடிமருந்து தயாரிக்கும் பிரிவு இருப்பதை தெரிவித்தார். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், தோட்டாக்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி.