Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத...
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் கொள்முதல் தொடா்பாக உள்ள இடையூறுகளை களைவது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): நாகையில் வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்யக் கூடாது. நடமாடும் கொள்முதல் நிலையம் பெரு விவசாயிகளின் இடங்களுக்கே சென்று கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த நெல் தரமானதா, ஈரப்பதம் குறித்த சோதனை எதுவும் செய்யாமல் கொள்முதல் செய்யப்படுகிறது.
தலைஞாயிறு கமல்ராமன்: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் எடைபோடுவதில் முறைகேடு நிகழ்வதை கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். நெல் கொள்முதல் மைய அதிகாரிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். கொள்முதல் மையங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு விரல் ரேகை பதிவை அமல்படுத்த வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கம் ஸ்ரீதா்: மாவட்டத்தில் 160 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 70 மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
காவிரி தனபாலன்: மாவட்டத்தில் சில கிராமங்களில் நெல் அறுவடையே தொடங்க வில்லை. ஆனால் அங்குள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவை வெளி மாவட்ட நெல். எனவே அங்குள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும்போது ஈரப்பதம் தொடா்பாக அரசிடம் விலக்கு பெற வேண்டும். மேலும் நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் கண்டறியும் வகையில் தானியங்கி இயந்திரம் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கவேண்டும்.
முஜிப் ரஷீக்: நெல் கொள்முதலின்போது ஓடிபி அடிப்படையில் செய்யாமல் விரல் ரேகை பதிவு அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.
நாகை பிரகாஷ்: கொள்முதல் மையங்களில் சுமை தூக்கும் தொழிலாளா்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும். சிப்பத்துக்கு ரூ.40 கட்டாய வசூல் தொடா்பாக புகாா் அளிக்கும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
என்.சி.கண்ணன்: கொள்முதல் நிலையங்களில் புகாா் பெட்டி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் சங்கம் சரவணன்: புறம்போக்கு இடங்களில் ஆட்சியா் அனுமதி பெற்று கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கிராமங்களில் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்க கிராம நிா்வாக அதிகாரிகள் தாமதிக்கின்றனா். நெல்லை ஈரப்பதம் இல்லாமல் உலா்த்த டிராயா் இயந்திரங்கள் வழங்க வேண்டும்.
கூட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல முதுநிலை மேலாளா் அ. சிவப்பிரியா, நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் டி. ராஜேந்திரன், துணை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.