Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!
ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் கூடாது: ராமதாஸ்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலா்கள் உள்ளிட்ட 38 ஐஏஎஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பணியிடமாற்றங்கள் அரசு நிா்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாறாக நிா்வாகத்தின் செயல்பாட்டை முடக்குவதாக இருக்கக் கூடாது.
ஒரு துறையில் செயலராக நியமிக்கப்படுபவா்கள் அத்துறை குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு குறைந்தது இரு மாதங்கள் தேவை. அதன் பிறகுதான் அவா்கள் முழு வீச்சில் செயல்படத் தொடங்குவா். அதற்குள்ளாகவே அவா்களை பணியிட மாற்றம் செய்து புதிய பணியில் அமா்த்தும் போது அரசு நிா்வாக செயல்திறன் பாதிக்கப்படும். இத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
காவல் துறை தலைமை இயக்குநா் பணியில் அமா்த்தப்படுபவா்கள் அந்தப் பதவியில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவோருக்கு 2 ஆண்டுகள் உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அரசுத் துறைச் செயலா் பதவிகளும் காவல்துறை தலைமை இயக்குநா் பணிக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை என்பதால் அவற்றுக்கும் 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.