இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு ப...
ஐந்து அக்காக்கள் - குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்
ஆறாவதாகப் பிறந்தவன் மூர்த்தி! ம்…அந்தக் காலத்திலெல்லாம் ‘இரண்டுக்கு மேல் வேண்டாம்!’என்ற நிலைப்பாட்டை அரசும் எடுக்கவில்லை-மக்களும் எடுக்கவில்லை. குழந்தைகளே செல்வந்தானே என்பதாலோ என்னவோ, நிறையப் பெற்றுக் கொள்வதில் ஒரு நிறைவு இருந்தது!
அந்தப் பெற்றோரும் விதி விலக்கல்ல. பெரும் வசதி இல்லையென்றாலும், வயிற்றுப் பாட்டுக்கு வஞ்சனையில்லாத குடும்பம். முருகேசன் தன் தந்தைக்கு ஒரே பையன். தனக்கும் ஓர் ஆண் பிள்ளை வேண்டுமென்று ஆசைப் பட்டார். ஆனால் ஆண்டவனோ பெண்களாகக் கொடுக்க, அடுத்தது ஆண்தான் என்று நம்பி, நம்பி, ஐந்து பெண்களைப் பெற்ற பிறகும், நம்பிக்கை இழக்காதவருக்கு.. ஆறாவதாக மூர்த்தி வந்து பிறந்தான்.
நடுத்தரக் குடும்பம் என்றாலும், அயராது உழைக்கும் எண்ணம் கொண்டவர் முருகேசன். விவசாயம் செய்ய வேண்டிய நேரத்தில்,இருந்த குறைவான நிலத்தில், ஊரே மெச்சச் சாகுபடி செய்வார்.
நெல் ஏமாற்றினால் உளுந்து, பயறில் கவனம் செலுத்திக் காசு பார்த்து விடுவார். வீட்டுத் திண்ணையைக் கடையாக்கி வைத்திருந்தார். தீபாவளி நேரத்தில் பட்டாசு விற்பார்; பொங்கல் சமயத்தில் கரும்பு, வாழைப்பழம், மாட்டு மாலைகள் என்று கடை விரிப்பார். அவர் உழைப்புக்காகவே காசும்,பணமும் அவரைத் தேடி வந்தன. பொங்கலும் தீபாவளியும் அவர் வீட்டில் களை கட்டும்; உற்சாகம் கரை புரண்டோடும்!
கிராமந்தான் என்றாலும்,பெண்பிள்ளைகள் அனைவரையும் நன்கு படிக்க வைத்தார். எந்தப் பெண்ணும் தன் விருப்பப்படி படிக்கலாமென்ற சுதந்திரத்தை அளித்தார். அந்தக் கிராமத்திலிருந்து முதன்முறையாக அவர் மகள்கள்தான் டவுனுக்குச் சென்று படிக்க ஆரம்பித்தார்கள். குறைந்தது தன் பெண்கள் எல்லோரும் எஸ்.எஸ்.எல்.சி.,யாவது படித்து முடித்துவிடவேண்டுமென்றும்,அதன் பின்னர் அவரவர் வசதிக்கேற்ப மேற்கொண்டு படிப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாமென்றும் தெரிவித்திருந்தார்.
அவர் அம்மா லட்சுமிதான், ஐந்து பேத்திகளையும், மூர்த்தியையும் எண்ணி அதிகமாகக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். அதிலும் அவன் ஆறாவதாகப் பிறந்தாலும் ஆணாகப் பிறந்ததற்கான மகிழ்ச்சிப் பெருக்கு அவருக்கு. அதோடு, சிறு வயதிலேயே தன்னை அமங்கலியாக்கி விட்டுச் சென்ற தன் கணவனின் சாயல் அவனிடம் நிறைய இருப்பதாகவும் எண்ணி, அவரிடத்தில் ஒரு திருப்தி. ’மகன் முருகேசன் எப்படியும் ஐந்தையும் நல்ல விதமாகக் கரையேற்றி விடுவான்.ஆனால் பேரன் மூர்த்திதான் பாவம்!
முருகேசன் காலத்திற்குப் பிறகு, தீபாவளி-பொங்கல் வரிசைகள், தொட்டதெற்கெல்லாம் தாய்மாமன் சீர்கள் என்று ஐந்து பேருக்காகவும் அலைக்கழியப் போகிறான்.ம்! நம்மால் என்ன செய்ய முடியும்?அங்காளம்மன் தாய்தான் அவனுக்கு அருள் புரியணும்.அவனுக்கு நல்ல வேலையைக் கொடுத்துச் சொத்தைப் பெருக்க ஆவன செய்யணும்!’என்று மனதுக்குள் வேண்டியபடி, குல தெய்வக் கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கைகளைக் கூப்புவார்! அதுவே தினசரி செயலாகிப் போனது!
காலந்தான் எவ்வளவு விரைவாக ஓடிப் போய் விடுகிறது!
பாட்டி நினைத்த படியே முருகேசன் பார்த்துப் பார்த்துத் திருமணங்களை நடத்தி வைத்தார். எல்லாவற்றையும் பார்க்கப் பாட்டிக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. மூன்று பெண்களின் திருமணத்தோடு அவர் கதை முடிந்து போயிற்று! இறக்கையிலும் அவர் இரக்கமெல்லாம் மூர்த்தி மேல்தான் வீழ்ந்திருந்தது. ’பாவம்! பேரன்!’ என்றே கடைசி மூச்சும் கதறித்தான் நின்றதோ!
- மூத்த பெண் ஆசிரியை ஆனாள்;
-அடுத்த பெண் சமூக சேவகியானாள்;
-மூன்றாம் பெண் நர்சானாள்;
-நான்காம் பெண் டாக்டரானாள்;
-கடைக்குட்டி ஐந்தாவதோ ஐ.ஏ.எஸ்., தேறினாள்!
மூர்த்தியை ஒவ்வொருத்தியும் மகன் போலக் கொண்டாட, பாட்டி பயந்தது போல் எதுவுமே நடக்கவில்லை!மாப்பிள்ளைகளும் தங்கள் மனைவிகளின் விருப்பமறிந்து நடந்து கொண்டார்கள். எனவே எல்லார் வீடுகளிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
ஒவ்வொரு அக்கா வீட்டிற்கும், தீபாவளி-பொங்கல் வரிசைகளை அவன் நேரடியாகவே சென்று கொடுப்பான். ஆயிரம் ரூபாய்க்கு அவன் செய்தால், அக்கா ஒவ்வொருவரும் பல ஆயிரம் ரூபாய் பரிசுப் பொருட்களைக் கொடுத்து அவனைத் திக்கு முக்காடச் செய்வார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் விட மாட்டார்கள்.
இதோ பொங்கல் நெருங்கி விட்டது!
பெரியக்கா வீட்டில் தட்டை வாங்கி பழம், பூ, இனிப்பு, வரிசைப் பணம் என்று அடுக்கி, அத்தானையும் - அக்காவையும் நிற்க வைத்து, வணங்கி நமஸ்காரம் செய்துவிட்டு, வரிசைத்தட்டை நீட்டினான். அவனை ஆசீர்வதித்துத் தட்டைப் பெற்றுக் கொண்ட அவர்கள்,வேறொரு தட்டில் தயாராக வைக்கப்பட்டிருந்த ஆடைகள், கைக் கடிகாரம், ஆகியவற்றை அவனுக்குக் கொடுத்தார்கள்.
’போன தடவை நீங்க வந்திருந்தப்போ ஒங்க கடிகாரத்தை மணி பார்க்க எடுத்தேன். அது டயல்ல ஏதோ அழுக்குப் படிஞ்சி பழசா இருந்திச்சு. அதான் மச்சான் ஒங்களுக்குப் புதுசா ஒரு வாட்ச் வாங்கினோம்!’ என்று அத்தான் சொல்ல, அதை ஆமோதிப்பதாக அக்காவும் பார்த்தாள்.பார்த்துப் பார்த்து இப்படி உதவுவதை நினைத்து அவன் கண்கள் கலங்கி விட்டன!
அடுத்த அக்கா வீட்டில் ஆடைகள், பணம் என்று அசத்தினார்கள்.
இப்பொழுதெல்லாம் தீபாவளி,பொங்கல் என்று வந்தாலே அவனுக்கு ஐந்து செட் ஆடைகள் கிடைத்து விடுகின்றன. அதிலும் ஒருவர் எடுத்தது போல் மற்றவர் வாங்கியது இருக்காது. ட்ரெண்டில் உள்ள ஆடைகளாகவே அனைத்தும் இருக்கும்.
‘எப்படி இது இவர்களுக்குச் சாத்தியமாகிறது?ஒருவர் எடுத்தது போல் மற்றவர் எடுக்காமல்’என்று அவன் மண்டையைக் குழப்பிக் கொள்ள,அப்புறந்தான் உண்மை தெரிய வந்தது.அவர்களுக்குள் கலந்து பேசி,யார் எதை வாங்குவது என்று முடிவு செய்தே வாங்குகிறார்கள் என்பது!
அவர்களின் அந்த ஒற்றுமை அவனைத் திருப்தியில் திக்குமுக்காட வைத்தது!
பாட்டி காலத்தில் ’ஐந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி!’ என்றார்கள். அதனால்தான் பாட்டியின் கடைசிக்காலம் பேரனை எண்ணிக் கலங்கியபடியே முடிந்தது.
ஆனால் இன்றைய நிலையில்,’ஐந்தாறு பெண் பிறந்தால் ஆண்டியும் அரசனாவான்!’ என்ற எதார்த்தம் நிரூபணமாகி வருகிறது. நம் மூர்த்தியே அதற்குச் சாட்சி!
இப்பொழுதெல்லாம் அக்கா வீடுகளுக்குக் காரில் சென்றுதான் மூர்த்தி வரிசை கொடுக்கிறான்!அவன் சொந்தமாகக் கார் வாங்கியதில் அக்காக்களின் பங்கும் அதிகம்.
மூர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்,அவனைப்போல் தங்களுக்கு அக்காக்கள் இல்லையே என்று ஆதங்கப் படுகிறார்கள்!
-அக்கா-தங்கைகளுக்கு வரிசை கொடுத்து உறவின் ஆழத்தைச் சீராக்கும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் இக்கதை காணிக்கை!
-என்றும் மாறா அன்புடன்,
-ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன், சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.