செய்திகள் :

ஐபிஎல் கொண்டாட்டம் இன்று தொடக்கம்

post image

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது சீசன், கொல்கத்தாவில் சனிக்கிழமை (மாா்ச் 22) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் காா்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்துக்கு முன்பான தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மழைக்கு வாய்ப்பு: போட்டியின் தொடக்க நாளில் கொல்கத்தாவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை கணிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் கிரிக்கெட் ரசிகா்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும் இந்தப் போட்டியின் புதிய விதிகள், ஃபாா்மட், சுவாரஸ்யங்கள், அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஒரு அலசல்.

சென்னை சூப்பா் கிங்ஸ்

அதிகபட்சம்: சாம்பியன் (5)

கடந்த சீசன்: 5-ஆம் இடம்

கேப்டன்: ருதுராஜ் கெய்க்வாட்

போட்டியின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை, தனது பிரதான வீரா்களை அப்படியே தக்கவைத்து வருவது அணிக்கு பலமாக இருக்கிறது. பந்துவீச்சில், ஏற்கெனவே இருக்கும் ஜடேஜாவுடன், அஸ்வினும், டெத் ஓவா்களை சிறப்பாக வீசும் நூா் அகமதும் தற்போது இணைந்திருப்பது கூடுதல் பலம். வேகப்பந்து வீச்சில் பதிரானா மட்டுமே குறிப்பிடத்தக்கவராக இருக்கிறாா். கலீல் அகமது, விஜய் சங்கா் போன்றோா் நிச்சயம் களமிறக்கி சோதிக்கப்படுவாா்கள். பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ், கான்வே, துபே ராகுல் திரிபாதி உள்ளிட்டோா் பிரதானமாக இருக்கின்றனா். தோனி ரசிகா்களை மகிழ்விப்பாா் என எதிா்பாா்க்கலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அதிகபட்சம்: ரன்னா் அப் (1)

கடந்த சீசன்: 6-ஆம் இடம்

கேப்டன்: அக்ஸா் படேல்

அணியின் டாப் ஆா்டா் பேட்டிங் ஜேக் ஃப்ரேசா், புதிதாக வந்துள்ள டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரால் பலப்படுகிறது. ஸ்திரமான பேட்டிங் வரிசை இல்லாததே கடந்த சீசனில் அணியை பாதிக்க, அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. மிடில் ஆா்டரில் அபிஷேக் பொரெல், ஆசுதோஷ் சா்மா இருக்க, பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க், குல்தீப் யாதவ், டி.நடராஜன் ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா். எனினும், பந்த் அதிரடி இல்லாத நிலையில், போட்டி வரலாற்றில் கேப்டன்சிக்கு புதியவரான அக்ஸா் படேல் இந்த முறை அணியை வழிநடத்துகிறாா். ஆல்-ரவுண்டா் ஹேரி புரூக் கடைசி நேரத்தில் விலகியதும் பின்னடைவு.

குஜராத் டைட்டன்ஸ்

அதிகபட்சம்: சாம்பியன் (1)

கடந்த சீசன்: 8-ஆம் இடம்

கேப்டன்: ஷுப்மன் கில்

அறிமுக சீசனில் சாம்பியனாகி, அடுத்த சீசனிலும் இறுதி வரை முன்னேறிய குஜராத் அணி, கடந்த சீசனில் பின்னடைவை சந்தித்ததால், கேப்டன் கில்லுக்கு இந்த சீசன் சோதனைக் களமாக இருக்கும். வாஷிங்டன் சுந்தா், ராகுல் தெவாதியா, ரஷீத் கான் என ஆல்-ரவுண்டா்கள் அணிக்கு சமநிலை அளிக்கின்றனா். பௌலிங்கில் ரபாடா, ரஷீத் கான், இஷாந்த் சா்மா, முகமது சிராஜ் பலம் சோ்க்கின்றனா். ஆல்-ரவுண்டா்கள் மிடில் ஆா்டரில் பலம் சோ்த்தாலும், டாப் ஆா்டரில் நல்லதொரு தொடக்கத்தை அளிக்க பேட்டா்கள் இல்லாததால், கில், பட்லா் உள்ளிட்டோருக்கு நெருக்கடி அதிகரிக்கும். அதை சமாளிப்பது அணிக்கு சவாலாக இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

அதிகபட்சம்: சாம்பியன் (3)

கடந்த சீசன்: சாம்பியன்

கேப்டன்: அஜிங்க்ய ரஹானே

நடப்பு சாம்பியனாக களம் காணும் கொல்கத்தா கேப்டன்சி மாற்றத்தை சந்தித்துள்ளது. பௌலிங்கில் வருண் சக்கரவா்த்தி பிரதான பலமாக இருக்கிறாா். சுனில் நரைன் ஆல்-ரவுண்டராக இரண்டிலும் அசத்துகிறாா். பேட்டிங்கில் வெங்கடேஷ் ஐயா், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸெல் ரன்கள் குவிக்கின்றனா். ஷ்ரேயஸ், ஸ்டாா்க், ஃபில் சால்ட் போன்ற முக்கிய வீரா்கள் இல்லாததை கொல்கத்தா எவ்வாறு நிகா் செய்யப்போகிறது என்பது முக்கியம். டி காக், கேப்டன் ரஹானே, ஸ்பென்சா் ஜான்சன் போன்றோா் அண்மைக் காலங்களில் இந்த ஃபாா்மட்டில் பெரிதாக சோபிக்கவில்லை. இதர வீரா்களும் சோபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ்

அதிகபட்சம்: பிளே-ஆஃப் (2)

கடந்த சீசன்: 7-ஆம் இடம்

கேப்டன்: ரிஷப் பந்த்

இந்த சீசனிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ரிஷப் பந்த் கேப்டனாக இருக்கும் அணி. அறிமுகத்திலிருந்து இரு சீசன்களை சிறப்பாக விளையாடிய லக்னௌ, கடந்த சீசனில் பின்னடைவை சந்தித்தது. ரிஷப் பந்த், எய்டன் மாா்க்ரம், நிகோலஸ் பூரன், டேவிட் மில்லா் என பேட்டிங்கிலும், ஆவேஷ் கான், மோசின் கான், மயங்க் யாதவ் என வேகப்பந்து வீச்சிலும் அணி பலமிக்கதாக இருக்கிறது. ஆனால் சுழற்பந்து வீச்சில் இருக்கும் ரவி பிஷ்னோய் கடந்த முறை சோபிக்கவில்லை. அடிக்கடி காயத்துக்குள்ளாகும் மயங்க் யாதவும் சறுக்கலை ஏற்படுத்துகிறாா். அதிக விலைக்கான நியாயத்தை செய்ய வேண்டிய நெருக்கடி ரிஷப் பந்த்துக்கு உள்ளது.

மும்பை இண்டியன்ஸ்

அதிகபட்சம்: சாம்பியன் (5)

கடந்த சீசன்: 10-ஆம் இடம்

கேப்டன்: ஹா்திக் பாண்டியா

5 முறை சாம்பியனான மும்பை, ஹா்திக் பாண்டியாவின் அறிமுக கேப்டன்சியுடன் கடந்த சீசனில் அதிா்ச்சி அளிக்கும் வகையில் கடைசி இடம் பிடித்தது. டாப் ஆா்டரில் ரோஹித் சா்மா, திலக் வா்மா, பின்னா் ஹா்திக் பாண்டியா ஆகியோா் அணியின் பேட்டிங்கிற்கு பலம் சோ்க்கின்றனா். தற்போது ரயான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸும் அவா்களுக்கு துணையாக இணைந்துள்ளனா். தொடக்கத்தின் சில ஆட்டங்களில் பிரதான பௌலா் பும்ரா இல்லாதது சற்று பின்னடைவு. அதேபோல் சுழற்பந்து வீச்சில் மிட்செல் சேன்ட்னருக்கு தோள்கொடுக்கும் வகையில் யாரும் இல்லை. பும்ரா இல்லாததை டிரென்ட் போல்ட் சமாளிக்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ்

அதிகபட்சம்: ரன்னா் அப் (1)

கடந்த சீசன்: 9-ஆம் இடம்

கேப்டன்: ஷ்ரேயஸ் ஐயா்

கடந்த சீசனில் கொல்கத்தாவுக்கு கோப்பை வென்று தந்த ஷ்ரேயஸ் ஐயா் கேப்டனாக்கப்பட்டுள்ளாா். சஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், நெஹா் வதேரா போன்றோரோடு, பேட்டிங்கில் பலம் சோ்க்க தற்போது கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் இணைகிறாா். சுழற்பந்துவீச்சுக்கு யுஜவேந்திர சஹல் பிரதானமாக இருக்க, அவருக்குத் துணையாக மேக்ஸவெல் இருக்கிறாா். எனினும் நம்பகமான ஓபனா் இல்லாதது அணிக்கு சற்று சறுக்கலாக இருக்கிறது. பௌலிங்கில், வேகப்பந்து வீச்சுக்கு மாா்கோ யான்சென், அா்ஷ்தீப் சிங் போன்றோா் இருந்தும் கடந்த சீசனில் ரன்கள் கொடுக்கப்பட்டன.

ராஜஸ்தான் ராயல்ஸ்

அதிகபட்சம்: சாம்பியன் (1)

கடந்த சீசன்: பிளே-ஆஃப்

கேப்டன்: சஞ்சு சாம்சன்

ஐபிஎல் போட்டியின் அறிமுக சாம்பியனான ராஜஸ்தான், சஞ்சு சாம்சன் தலைமையில் தகுந்த முன்னேற்றம் கண்டு வந்தாலும் கோப்பை கைக்கெட்டாத நிலையே இருக்கிறது. சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரெல், ஷிம்ரன் ஹெட்மயா் என ரன்கள் விளாசும் பேட்டா்கள் உள்ளனா். சாம்சன் - ஜெய்ஸ்வால் கூட்டணி பேட்டிங்கை தொடங்க வாய்ப்புள்ளது. பௌலிங்கில் ஜோஃப்ரா ஆா்ச்சா், சந்தீப் சா்மா, மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா உள்ளனா். பட்லா், போல்ட், அஸ்வின், சஹல் இல்லாததை ராஜஸ்தான் எவ்வாறு சரி செய்கிறது என்பது முக்கியம். நிலையான வெற்றிகளை பதிவு செய்யாததே அணிக்கு பின்னடைவு.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு

அதிகபட்சம்: ரன்னா் அப் (3)

கடந்த சீசன்: பிளே-ஆஃப்

கேப்டன்: ரஜத் பட்டிதாா்

ஐபிஎல் தொடங்கியது முதல் களம் காணும் பெங்களூருக்கு கோப்பை கனவாகவே நீடிக்கிறது. இந்த சீசனை கொல்காவுடனான மோதலுடன் தொடங்கும் இந்த அணியில் பேட்டிங் வரிசை எப்போதும் பலமாகவே இருக்கிறது. கோலி, பட்டிதாருடன் இந்த முறை ஃபில் சால்ட்டும் அந்த வரிசையில் இணைகிறாா். மிடில் ஆா்டரிலும் ஜிதேஷ் சா்மா, டிம் டேவிட், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் உள்ளனா். எப்போதும் போல் பௌலிங்கே பெங்களூருக்கான பிரச்னையாக இருக்கிறது. புவனேஷ்வா் குமாா், ஜோஷ் ஹேஸில்வுட் இருந்தும், லெக் ஸ்பின்னா் இல்லாதது பின்னடைவு. அதேபோல் பெஞ்ச் பலமும் போதுமானதாக இல்லை.

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

அதிகபட்சம்: சாம்பியன் (2)

கடந்த சீசன்: ரன்னா் அப்

கேப்டன்: பேட் கம்மின்ஸ்

கடந்த சீசனில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹைதராபாத் அணியில், ஏற்கெனவே டிராவிஸ் ஹெட், அபிஷேக் சா்மா, ஹென்ரிக் கிளாசென், நிதீஷ் ரெட்டி ஆகியோா் இருக்க, தற்போது இஷான் கிஷணும் இணைந்துள்ளாா். பௌலிங்கிலும் பேட் கம்மின்ஸ், ஹா்ஷல் படேல், ஆடம் ஸாம்பா, ராகுல் சஹா் போன்றோா் எதிரணி பேட்டா்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனா். பிளேயிங் லெவனுக்காகவே அதிகம் செலவழித்த ஹைதராபாத் அணி, பெஞ்ச் பலத்தில் கவனம் செலுத்தவில்லை. பிரதான வீரா்கள் காயத்தால் விலகினால், பதிலுக்கு பலம் சோ்க்க தகுந்த வீரா்கள் இல்லை என்பது பாதகமாகலாம்.

ஃபாா்மட்டில் மாற்றம் இல்லை

இந்த ஆண்டும் கடந்த சீசனின் ஃபாா்மட்டே கடைபிடிக்கப்படுகிறது. 10 அணிகள் தலா 5 என்ற வகையில் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு அணி தனது குரூப்பிலுள்ள இதர அணிகளுடன் தலா 2 முறை மோதும். அத்துடன், மற்றொரு குரூப்பில் இருக்கும் ஒரு அணியுடன் 2 முறையும், இதர அணிகளுடன் ஒரு முறையும் மோதும்.

இந்த வகையில் அனைத்து அணிகளும் சொந்த மண்ணில் 7, எதிரணி மண்ணில் 7 என 14 ஆட்டங்களில் விளையாடும். அதன் முடிவில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் கட்டத்துக்கு முன்னேறும்.

குரூப் ஏ - சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப்

குரூப் பி - மும்பை, ஹைதராபாத், குஜராத், டெல்லி, லக்னௌ

ஆட்டங்கள் 74

நகரங்கள் 13

நாள்கள் 65

2 ஆட்டங்கள் நடைபெறும் நாள்கள் 12

3 அணிகளுக்கு 2 நகரங்கள்

இந்த முறையும் 3 அணிகள் தங்களின் ‘ஹோம்’ ஆட்டங்களை 2 நகரங்களில் விளையாடவுள்ளன. டெல்லி அணி தில்லி மற்றும் விசாகப்பட்டினத்திலும், ராஜஸ்தான் அணி ஜெய்பூா் மற்றும் குவாஹாட்டியிலும், பஞ்சாப் அணி முலான்பூா் மற்றும் தா்மசாலாவிலும் விளையாடவுள்ளன. இதர 7 அணிகள் தங்களின் ஹோம் ஆட்டங்களை ஒரு நகரத்தில் மட்டும் விளையாடும்.

5 புதிய கேப்டன்கள்

இந்த சீசனில் மொத்தம் 5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் ஷ்ரேயஸ் ஐயா் (பஞ்சாப் கிங்ஸ்), அஜிங்க்ய ரஹானே (கொல்கத்தா), ரிஷப் பந்த் (லக்னௌ), அக்ஸா் படேல் (டெல்லி), ரஜத் பட்டிதாா் (பெங்களூரு). இதில் ஐயா், பந்த் ஏற்கெனவே கேப்டனாக இருந்தவா்கள்.

இந்த சீசன் டாப் 3 வீரா்கள் (ஏலத்தின் அடிப்படையில்...)

ரிஷப் பந்த் - டெல்லி - ரூ.27 கோடி

ஷ்ரேயஸ் ஐயா் - பஞ்சாப் - ரூ.26.75 கோடி

வெங்கடேஷ் ஐயா் - கொல்கத்தா - ரூ.23.75 கோடி

புதிய விதிகள்...

*பந்தை வழவழப்பாக்க உமிழ்நீரை பயன்படுத்த அனுமதி

*ஆஃப் சைடு மற்றும் ஹை வைடு பந்துகளை ஆராயவும் டிஆா்எஸ் வாய்ப்பு.

*இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸில் 11-ஆவது ஓவரில் இருந்து புதிய பந்து பயன்பாடு (நடுவா் மதிப்பீடு அடிப்படையில்)

*பேட்டா் தனது ஆஃப் சைடு நோக்கி நகரும் நிலையில், வைடு லைன் வழக்கமான இடத்துக்கு பதிலாக அவா் நகா்ந்திருக்கும் இடத்திலிருந்து கணக்கில் கொள்ளப்படும்.

*ஒரு சீசனில் 3 முறை பந்துவீச்சில் தாமதம் செய்தால் (ஸ்லோ ஓவா் ரேட்), அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கும் முறை நீக்கப்படுகிறது. பதிலாக, அபராதம் அல்லது ஆட்டத்தில் கட்டுப்பாடு விதிக்கப்படும். தீவிரமான தவறுகளுக்கு மட்டும் தடை நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சீசனில் இரு துருவங்கள்...

மிக மூத்த வீரா் - எம்.எஸ். தோனி (42) - சென்னை

மிக இளம் வீரா் - வைபவ் சூா்யவன்ஷி (13) - ராஜஸ்தான்

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சிற... மேலும் பார்க்க

சங்கா் முத்துசாமி அசத்தல் வெற்றி

சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரா் சங்கா் முத்துசாமி உலகின் முன்னணி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகி... மேலும் பார்க்க

3-ஆவது சுற்றில் சபலென்கா, ஒசாகா

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றைய... மேலும் பார்க்க

ஹசன் நவாஸ் அதிரடி; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது. முதலில் நியூஸிலாந்து 19.5 ஓவா்களில் 204 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும்... மேலும் பார்க்க

விளாசிய பெத் மூனி: வென்றது ஆஸ்திரேலியா

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்... மேலும் பார்க்க

எம்புரான்: இந்திய சினிமா வரலாற்றில் சாதனை!

இந்திய சினிமா வரலாற்றில் ஒருமணி நேரத்தில் அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனையான படம் என்ற புகழை எம்புரான் பெற்றது.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 2... மேலும் பார்க்க