Doctor Vikatan: BCCI; கிரிக்கெட் பந்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவது சரியா? ஆரோக்கியக் கேடு ஆகாதா?
Doctor Vikatan: கிரிக்கெட் பந்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவது பலகாலமாக பழக்கத்தில் இருக்கிறது. பந்தின் ஒரு பக்கத்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவதன் மூலம் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்று சொல்வார்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக இந்த மரபுக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்தத் தடையை நீக்கி, எச்சில் தொட்டு பந்தை பளபளப்பாக்க பிசிசிஐ ( BCCI) மீண்டும் அனுமதி அளித்துள்ளதாகச் செய்தி பார்த்தேன். எச்சில் தொட்டு பந்தை பளபளப்பாக்குவது, பணத்தை எண்ணுவது, பஸ்ஸில் டிக்கெட் கிழித்துக் கொடுப்பதெல்லாம் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தாதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

காலங்காலமாகப் பழக்கத்தில் இருந்தாலும் எச்சில் தொட்டு கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்கும் செயல் நிச்சயம் தவறானதுதான். கொரோனா காலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலுமே இந்தச் செயல் அனுமதிக்கப்படக் கூடாது.
எச்சில் தொட்டு பந்தை பளபளப்பாக்கும்போது அதைச் செய்கிற நபருக்கும் தொற்று பரவும். அந்தப் பந்தை கேட்ச் செய்பவருக்கும், அதைக் கையாள்பவருக்கும் தொற்று பரவும். அதாவது பந்திலிருந்து வாய் வழியே ஒருவருக்கு தொற்று பரவும். அவரது எச்சில் பட்டுப் பறக்கும் பந்தின் மூலம் இன்னொருவருக்கும் பரவும். எச்சில் தொட்டு பணத்தை எண்ணுவது, நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களைத் திருப்புவது என எல்லாமே இத்தகைய செயல்கள்தான். இவற்றின் மூலமும் தொற்று பரவும் ஆபத்துகள் உள்ளன. எச்சில் தொட்டுச் செய்கிற இந்த விஷயங்கள் தவறானவை என குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படுவதும் இதனால்தான்.

எச்சில் மூலம் பரவும் பலவகையான தொற்றுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குடல்-வயிற்றுப் பகுதியில் தொற்று ஏற்பட்டு, பேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு, காய்ச்சல் போன்றவை எச்சில் மூலம் பரவக்கூடியவையே. அடுத்து ஃப்ளூ காய்ச்சல் பரவும் சீசனில் ஃப்ளூ, கொரோனா, அடினோவைரஸ், மைக்கோபிளாஸ்மா உள்ளிட்ட தொற்றுகள் பரவலாம். அடுத்து கோடைக்காலத்தில், எச்சில் மூலம் சின்னம்மை, தட்டம்மை போன்றவை பரவலாம். கோடைக்காலத்தில் வயிற்றுப்போக்கு பிரச்னை அதிகரிக்கும். எச்சில் மூலம் இதுவும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும். அடுத்து 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கன்ஜங்டிவைட்டிஸ் (Conjunctivitis) பாதிப்பும் ஒருவரது எச்சில் மூலம் மற்றவருக்குப் பரவலாம். எனவே, எச்சிலைத் தொட்டுப் பொருள்களைக் கையாள்வதை எந்த நிலையிலும் தவிர்ப்பதே ஆரோக்கியமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks