வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது
காவலர்களின் என்கவுன்டரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட குற்றவாளி சுட்டுக்கொலை!
பிகார் மாநிலத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளி காவல் துறையினரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பிகாரின் போஜ்பூர் மற்றும் பூர்ணியா ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான சுன்முன் ஜா (எ) ராகேஷ் ஜா என்பவருக்கு கடந்த மார்ச் 10 அன்று அரா பகுதியிலுள்ள பிரபல நகைக் கடையில் நடந்த கொள்ளையில் தொடர்புள்ளது என சந்தேகிக்கப்பட்டு அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், கிடைக்கப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில் அராரியா மாவட்ட காவல் துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து இன்று (மார்ச் 22) அதிகாலை 4 மணியளவில் ராகேஷும் அவரது கூட்டாளிகளும் பதுங்கியுள்ளதாகக் கூறப்பட்ட நார்பட்கஞ்ச் எனும் பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, போலீஸார் தங்களை சுற்றி வளைத்திருப்பதை உணர்ந்த ராகேஷ் அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதுடன் காவலர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
இதையும் படிக்க: இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்: பினராயி விஜயன் பேச்சு
இதற்கு, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ராகேஷின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்துள்ளார். மேலும், அவரது கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், காவலர்கள் படுகாயமடைந்த ராகேஷை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையில் நான்கு காவலர்களும் காயமடைந்துள்ளதாகவும் ஆனால், அவர்களது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லையெனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராகேஷ் ஜாவை ரூ.3 லட்சம் சன்மானம் அறிவித்து காவல் துறையினர் தேடி வந்தனர். மேலும், தற்போது தப்பியோடிய அவரது கூட்டாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.