பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டில் அங்குள்ளவர்களுக்கு இடையே இன்று (மார்ச் 22) வாக்குவாதம் எழுந்து மோதல் வெடித்துள்ளது. அப்போது, அதில் ஒருவர் தான் வைத்திருந்த கையெறி குண்டை அங்கிருந்தவர்கள் மீது வீசியுள்ளார்.
இந்நிலையில், அந்த குண்டு வெடித்ததில் 3 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!
இதனைத் தொடர்ந்து, பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிய அந்நாட்டு அதிகாரிகள் படுகாயமடைந்தவரை மீட்டு குர்ராம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலை நடத்தியவர் பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.