கண்மணி - அஷ்வத் தம்பதி அறிவித்த மகிழ்ச்சி செய்தி!
சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதி தாங்கள் பெற்றோராகப் போவதாக அறிவித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.
அந்தத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
கண்மணி மனோகரனை அவரது ரசிகர்கள் ஸ்வீட்டி என்ற அன்போடு அழைத்து வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
அதேபோல், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா உள்ளிட்ட பல்வேறு பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருபவர் அஷ்வத். பாடகி சிவாங்கி தொகுத்து வழங்கவுள்ள புதிய நிகழ்ச்சியில் இவரும் இணையவுள்ளார்.
இதனிடையே, கண்மணி மனோகரன் - அஷ்வத் இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் கோலாகலகமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.
மகிழ்ச்சி செய்தியை அறிவித்த கண்மணி - அஷ்வத்
கண்மணி மனோகரன் - அஷ்வத் இவர்களின் திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் ஆன நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு சிங்கப்பூர் சென்றுள்ளனர். அங்கு எடுத்த விடியோ ஒன்றை பதிவிட்டு, ”நாங்கள் பெற்றோர் ஆகப் போகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.
கண்மணி மனோகரன் கருவுற்று இருக்கும் விடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இவர்களின் ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
லட்சுமி தொடர் நாயகன் ஆர்யன், ”நம்ம சங்கத்துக்கு வாங்க” என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ”நீண்ட நாள்களாக இந்த அறிவிப்புக்கு காத்திருந்தோம்” என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.