அமெரிக்காவால் எதுவும் சாத்தியமே! -கிரீன்லாந்து குறித்து துணை அதிபர் வான்ஸ்
கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவது சாத்தியமே என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ்.
இவ்விவகாரம் குறித்து ஜே.டி. வான்ஸ் அளித்துள்ள பேட்டியொன்றில், “கிரீன்லாந்தை அமெரிக்கா விலைக்கு வாங்குவது சாத்தியமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், “இது சாத்தியப்படக்கூடும் என்றே நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் டென்மார்க் அரசை விமர்சித்துள்ள வான்ஸ், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மிக முக்கியம். டென்மார்க் தன் கடமையை சரியாகச் செய்யவில்லை. அமெரிக்காவுடன் நல்லதொரு நட்புறவை கடைப்பிடிக்கவுமில்லை” என்று பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேவைப்பட்டால் கிரீன்லாந்தை கையகப்படுத்துவார் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் வான்ஸ், “அதிபர் டொனால்ட் டிரம்ப் இதைத்தான் செய்யப்போகிறார். ஐரோப்பிய நாடுகள் என்ன கத்தினாலும்சரி, அவர் கண்டுகொள்ளப் போவதில்லை. அமெரிக்க குடிமக்களின் நலனும் விருப்பமுமே அவருக்கு முதன்மையானது.” என்றார்.
“கிரீன்லாந்து மக்கள் டென்மார்க் அரசின் நடவடிக்கைகளால் மகிழ்ச்சியாக இல்லை” என்ரு குறிப்பிட்டுள்ள வான்ஸ், கிரீன்லாந்திலுள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா அடைய ஆயத்தமாக இருப்பதைக் குறிப்பிட்டும் பேசியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க துணை அதிபரின் மனைவியான உஷா வான்ஸ், தம் மகனுடன் கிரீன்லாந்துக்கு வியாழக்கிழமை செல்லவிருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் கிரீன்லாந்தின் கலாசாரத்தை பற்றி அறிவதுடன் அங்குள்ள பாரம்பரியமிக்க தலங்களைச் சென்று பார்வையிடுவர். அத்துடன், நாய்களால் இழுக்கப்படும் வண்டிகளுக்கிடையிலான போட்டியையும் கண்டுகளிக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப்பின் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸும் அமெரிக்க ஆற்றல் துறை செயலர் கிறிஸ் ரைட்டும் இணைந்து கிரீன்லாந்து செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிரீன்லாந்துக்கு அமெரிக்க அதிகாரிகளின் தொடர் வரவால் டென்மார்க் அதிருப்தியடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.