தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்
வல்லபபாய் படேலின் மறு உருவம் அமித் ஷா! -ஆர்.பி. உதயகுமார்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்க்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தில்லிக்கு பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து 2 மணிநேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாக பேசினேன்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கட்சிக் கூட்டத்தில் அமித் ஷாவை புகழ்ந்து ஆர்.பி. உதயகுமார் பேசிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது.
அதில் அவர் பேசியதாவது:
“இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டு மணிநேரத்துக்கு மேலாக தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன.
ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்” எனத் தெரிவித்தார்.