குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்த...
Empuraan: `மலையாள சினிமாவின் புதிய உச்சம்' - எம்புரான் படத்துக்கு ஆதரவு தெரிவித்த பினாராயி விஜயன்
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் வலதுசாரிகள் இந்த படத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து திரைப்படக் குழுவினர் படத்தின் பல்வேறு காட்சிகளை நீக்கியதுடன், வில்லனாக வரும் பாத்திரத்தின் பெயரையும் மாற்றியுள்ளனர்.

நடிகர் மோகன்லால் படத்தின் காட்சிகளால் வேதனை அடைந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்தநிலையில், சங் பரிவார்களால் உருவாக்கப்பட்ட அச்சச் சூழல் கவலையளிப்பதாக பதிவிட்டுள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
அவரது சமூக வலைத்தள பதிவில், "மலையாள திரையுலகை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் எம்புரான் திரைப்படத்தைப் பார்த்தேன்.
சங்பரிவார் கும்பல் திரைப்படத்துக்கும் அதன் நடிகர்களுக்கும் எதிரான வெறுப்பு பிரசாரங்கள் மூலம் பரவலான வகுப்புவாதத்தைக் கட்டவிழ்த்துக்கொண்டிருந்தபோது நான் படத்தைப் பார்த்தேன்.

உண்மை என்னவென்றால் நம் நாடு கண்டதிலேயே ஒரு கொடூரமான இனப்படுகொலையை படத்தில் சித்தரித்திருப்பது சங் பரிவார் கும்பலையும் அதன் முக்கிய நபர்களையும் கோபப்படுத்தியிருக்கிறது.
படக்குழுவை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பொது அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
படத்தயாரிப்பாளர்கள் படத்தை மறுதணிக்கைக்கு உட்படுத்தி காட்சிகளை நீக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. சங்பரிவாரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தும் சூழல் கவலையளிக்கிறது.
ஒரு கலைப்படைப்பு வகுப்புவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அதன் கொடூரத்தை சித்தரிக்கும்போது, வகுப்புவாத சக்திகள் அதை அழித்து, கலைஞர்களை கொடூரமாகத் தாக்குவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
ஒரு ஜனநாயக சமூகத்தில் குடிமக்களின் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும். கலைப்படைப்புகளையும் கலைஞர்களையும் அழிக்கவும் தடை செய்யவும் வன்முறை அழைப்புகள் விடுக்கப்படுவது பாசிச மனப்பான்மையின் சமீபத்திய வெளிப்பாடுகளாகும். இவை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்.
திரைப்படங்களை உருவாக்கவும், பார்க்கவும், ரசிக்கவும், மதிப்பிடவும், உடன்படவும், உடன்பாடாமல் இருக்கவும்... இன்னும் பலவற்றுக்குமான உரிமைகளை இழக்கக் கூடாது. இதற்காக, ஜனநாயக மதச்சார்பற்ற விழுமியங்களில் வேரூன்றிய இந்த நாட்டின் ஒன்றுபட்ட குரல் எழுப்பப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.