குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்த...
L2 Empuraan: ''லூசிஃபர் படத்தைப் பற்றி சிரஞ்சீவி சார்கூட நடந்த உரையாடல்'' - ப்ரித்விராஜ் ஷேரிங்ஸ்
தனது கச்சிதமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கமற இடம் பிடித்திருப்பவர் நடிகர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ளவர். 23 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் கொடிகட்டிப் பறக்கும் பிரித்விராஜ், நடிகராக மட்டுமல்லாமல், கடந்த 2019-ம் ஆண்டு 'லூசிஃபர்' படத்தை இயக்கி டைரக்டராகவும் களமிறங்கினார். ̀எம்புரான்' படத்திற்காக அவருடன் உரையாடியதிலிருந்து....
மார்ச் 28, 2019 இல் 'லூசிஃபர்-1' திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இப்போது 'லூசிஃபர்-2 - எம்புரான்' மார்ச் 27 இல் ரிலீஸ் ஆகியுள்ளது. இது தற்செயலாக அமைந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா சார்?
எதுவும் தற்செயலாக நடக்கவில்லை. எல்லாம் திட்டமிடல்தான். பெரிய திரைப்படங்கள் பொதுவாக வியாழனன்று வெளியிடுவது வழக்கம். அதுபோல இந்த படத்தையும் வியாழனன்று வெளியிட நினைத்தோம். அப்போதும் இந்தப் படத்தை 'லூசிஃபர்-1' திரைப்படம் வெளியான தேதியிலேயே வெளியிட நினைத்தோம். வியாழனன்று வெளியிட வேண்டும் என்பதால் ஒரு நாள் முன்னதாக வெளியிடுகிறோம்.

சுமார் 23 ஆண்டு காலம் நடிகராக நீங்கள் இருந்து வரும் நிலையில், எப்போது படம் டைரக்ட் செய்யும் எண்ணம் வந்தது? நம்மால் டைரக்டராக கரியரைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை வந்தது எப்படி?
நான் நடிகரான நேரத்திலிருந்தே எனக்கு படம் டைரக்ட் செய்ய ஆர்வமிருந்தது. ஆனால், படம் டைரக்ட் செய்ய நம்பிக்கை வந்தது 2003, 2004, 2005-ல் நான் மலையாள படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தபோதுதான். ஆக்ஷன் டைரக்டர் பத்மகுமார் டைரக்ட் செய்த 'வர்க்கம்' என்ற படத்தில், கோரியோகிராஃபர் நியமிக்காத காரணத்தால் நான் முதல்முறையாக ஒரு ஆக்ஷன் சீக்குவன்ஸை டைரக்ட் செய்தேன். அது சிறப்பாக அமைந்தது. மீண்டும் அதே டைரக்டரோடு இணைந்து 'வாஸ்தவம்' படத்தின் க்ளைமாக்ஸில் உள்ள சண்டைக் காட்சிகளை டைரக்ட் செய்தேன். அதன் பிறகு, நிறைய படங்களில் ஆக்ஷன் சீக்குவன்ஸ் டைரக்ட் செய்ய ஆரம்பித்தேன். அதே நேரத்தில், நீங்கள் எப்படி சண்டைக்காட்சிகள் டைரக்ட் செய்யலாம் என சில ஆக்ஷன் மாஸ்டர்கள் கேள்வியும் எழுப்பினார்கள்.
சினிமா ஷூட் செய்ய விரும்பினால் என்ன வேண்டுமானாலும் ஷூட் செய்திருக்கலாம். ஆனால், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை ஷூட் செய்ய உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
திரைப்படத்துக்கான ஆக்ஷன் கோரியோகிராஃபர் நியமிக்க கையில் காசு இல்லை. படத்தின் டைரக்டர் என் நண்பர் தான். ஏதோ முயற்சி செய்யலாம் என நினைத்து அப்போது டைரக்ட் செய்தேன். ஆனால், முயற்சியின் பலன் நன்றாக அமைந்தது. 'வர்க்கம்' படத்தில் ஏற்கனவே நான் இரண்டு ஆக்ஷன் சீக்குவன்ஸ் ஷூட் செய்திருந்தேன். மெயின் ஆக்ஷன் சீக்குவன்ஸை பழனி மாஸ்டர் ஷூட் செய்தார். இந்த நேரத்தில் பழனி மாஸ்டர் மறுபடியும் ரொம்ப பிஸியாக இருந்தார். அப்போது புதிய ஃபைட் மாஸ்டர் யாரைக் கூப்பிட்டாலும் தகுந்த அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். அந்த அட்வான்ஸ் கொடுக்க வாய்ப்பில்லாமல் இருந்ததால், அந்த நேரத்தில் நான் அந்த சீக்குவன்ஸை ஷூட் செய்ய நேர்ந்தது. அதுபோன்ற ஃபைட் சீக்குவன்ஸை அந்த படத்தில் வைக்க முன்பு திட்டமே இல்லை. திடீரென ப்ரீ-க்ளைமாக்ஸில் ஒரு சின்ன ஆக்ஷன் ப்ளாக் மாதிரி செய்யும் ஐடியா ஷூட்டிங் நடந்து வந்த வேளையில் தோன்றியது. அப்போது ஃபைட் மாஸ்டர் கிடைக்காததால் நான் ஏதேச்சையாக ஷூட் செய்ய நேர்ந்தது.

இந்த புராஜெக்ட்டுக்காக பெரியளவில் செயல்பட தைரியம் அதிகம் வேண்டும். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அந்த தைரியம் மோகன்லால் சாருக்கும் ஆண்டனி பெரும்பவூருக்கும் தான் அதிகம். 2018-ல் நான் 'லூசிஃபர்-1' ஷூட் செய்தபோது, அது மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய திரைப்படமாக வெளிவந்தது. புது டைரக்டரை நம்பி அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் செய்யலாம் என்ற தைரியம் மோகன்லால் சார் மற்றும் ஆண்டனி பெரும்பாவூருக்கும் தான் இருந்தது. அவர்களது தைரியத்தால் தான் நாம் இன்று 'எம்புரான்' பற்றிப் பேசி வருகிறோம். கிட்டத்தட்ட 2016, 2017 இல் இந்த படத்தின் கான்செப்ட் தோன்றியது. அந்த காலத்தில் யுனிவர்ஸ், ஃப்ரான்சைஸ் போன்ற கான்செப்ட்டுகள் எவரும் அறியாதது. அதைப் பற்றி பேசினால் 'என்ன பேசுறீங்க?' எனக் கேட்கும் நிலை இருந்தது. அதனால், முதல் பாகம் நன்றாக அமைந்தால் அடுத்த பாகம் குறித்து பேசி அறிவிக்கலாம் என அப்போது அமைதியாக இருந்துவிட்டோம்.
̀லூசிஃபர்' படத்தின் ரீமேக்காக தெலுங்கில் வெளிவந்த "காட்ஃபாதர்" படம் பார்த்துவிட்டீர்களா? அந்த படம் தொடர்பாக உங்களிடம் பேசினார்களா?
நான் படத்தை முழுதாக பார்க்கவில்லை. ஆனால், பல காட்சிகளைப் பார்த்தேன். ஆம், அந்த படம் குறித்து என்னிடம் பேசி இருந்தார்கள். கொச்சினில் நடைபெற்ற 'சை ரே நரசிம்ம ரெட்டி' படத்தின் வெளியீட்டு விழாவில் விருந்தினராக கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார் சிரஞ்சீவி சார். 'சை ரே நரசிம்ம ரெட்டி' படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தந்திருந்தார் சிரஞ்சீவி சார். ஆனால், அப்போது நான் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து வந்ததால், இந்த வாய்ப்பை பயன்படுத்த இயலவில்லை. எனவே, என்னை பட வெளியீட்டு விழாவிற்கு விருந்தினராக அழைத்திருந்தார். விழாவிற்கு சென்றிருந்த என்னை சிரஞ்சீவி சார் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்று, 'லூசிஃபர்' படம் இயக்கப்போவது பற்றி நிறைய பேசினார்.

பல ஆண்டுகள் கழித்து மோகன்லால் சாரும் மம்முட்டி சாரும் இணைந்து மகேஷ் நாராயணன் சார் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். ஃபேன் பாயாக நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்?
மிக மிக ஆர்வமாக இருக்கிறேன்! மொத்த இன்டஸ்ட்ரியும் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் சொன்னது போல, மிக சிறந்த திறன்வாய்ந்த குழு, மகேஷ் ரொம்ப திறன்வாய்ந்த புத்திசாலி டைரக்டர். மிக சுவாரசியமான கதைகளை படைப்பவர் மகேஷ். அவருடைய படைப்பை காண அனைவரும் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX