பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
பிரிட்டனின் பொருளாதாரத் தடை: இலங்கை கண்டனம்
கொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தங்கள் நாட்டு முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட மூன்று உயரதிகாரிகள் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்துள்ளதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரிட்டன் அரசின் இந்த பொருளாதாரத் தடை ஒருதலைபட்சமானது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க முயற்சிகளைக் குலைப்பதாக அமையும்’ என்று விமா்சிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2009 உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் முப்படை தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோா் மீதும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்து, பின்னா் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி நாடாளுமன்ற உறுப்பினரான வினாயகமூா்த்தி முரளீதரன் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.