தாய்மொழியில் மருத்துவக் கல்வி ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம்! -பிரதமர் மோடி
நாகபுரி: தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்கிற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பது ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸின் நிறுவனத் தலைவா்களின் நினைவிடங்களுக்கு இன்று(மார்ச் 30) சென்றுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி: “இந்த உலகம் ஒரே குடும்பம் போன்றது என்கிற நமது தாரக மந்திரமானது உலகின் அனைத்து மூலைகளிலும் சென்றடைந்துள்ளது.
இந்திய விடுதலைக்குப்பின் நாங்கள் மிக துணிச்சலானதொரு நடவடிக்கையை எடுத்தோம். அது என்னவென்றால் - ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக வசதியாக, அவரவர் தம் தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்பதேயாகும்.
இதுபோன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளால், மருத்துவத் துறையிலும் நாங்கள், நமது பாரம்பரிய ஞானத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். நமது யோகா, ஆயுர்வேதா ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகள், இப்போது ஒட்டுமொத்த உலகத்திலும் புது அங்கீகாரத்தை பெற்றுத் திகழ்கின்றன. இந்தியாவின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.”
“நமது நாட்டின் வரலாற்றை திரும்பிப்பார்த்தால், நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறோம், பல்வேறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் சமூக கட்டமைப்பை தகர்க்க கொடிய முயற்சிகள் பல அரங்கேறியுமுள்ளன. ஆனால், இந்தியாவின் சுய சிந்தனை உயிர்ப்புடன் விளங்குகிறது.
இது எப்படி சாத்தியமானது? பல்வேறு தருணங்களிலும் பல இயக்கங்கள் செயல்பாடுகள் இதை கட்டிக்காத்துள்ளன.குரு நானக் தேவ், கபீர் தாஸ், துளசி தாஸ், சூர் தாஸ், புனித துக்காராம், இன்னும் பலர் அவர்களது தார்மீக மதிப்புகளாலும் நடவடிக்கைகளாலும் நமது தேசிய சுய சிந்தனைக்கு உயிர்கொடுத்துள்ளனர்.
நம்பிக்கையின்றி துவண்டுபோயிருந்த சமுதாயத்தில் சுவாமி விவேகானந்தர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்” என்றார்.