அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: 85% விண்ணப்பங்கள் நிராகரிப்பு; RTI கொடுத்த அதிர்ச்சி!
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தொழில் முனைவோர்களாக உருவாக்க, `அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை' தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசால் 2023-ல் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக வங்கியில் பயனாளர்கள் பெறும் கடன் தொகையின் அடிப்படையில் இயந்திரங்களையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்காக 35 சதவிகிதம் மூலதன மானியமும், 6 சதவிகித வட்டி மானியமும் வழங்கப்படும்.
2023-24 ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் கீழ் இத்திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் சொல்வது என்ன?
இத்திட்டத்தில் பயன்பெற்றவர்கள் விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் பேசும்போது, "தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செயல்படத்தொடஙகிய அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 2023-24 ஆண்டுகளில் 21 மாதங்களில் மாவட்ட அளவில் எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்? எத்தனை பேர் தேர்வு செயப்பட்டார்கள்? பயனைடைந்தவர்கள் எத்தனை பேர்? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்று, சென்னையிலுள்ள தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரக அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால்,

விண்ணப்பங்கள் நிராகரிப்பு:
கடந்த 21 மாதங்களில் மொத்தம் 17,629 நபர்கள் விண்ணப்பித்த நிலையில், வெறும் 2,295 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1032 நபர்கள் விண்ணப்பித்த நிலையில், 135 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 897 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
மிகக்குறைந்த அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரும் தேனி மாவட்டத்தில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரு ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.259 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது தெரிய வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை அதிக அளவில் தொழில் முனைவோர்களாக மாற்ற உருவாக்கப்பட இத்திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி கவனம் செலுத்த அரசு தவறி விட்டது.

பயனாளர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டு தோறும் ரூ.500 கோடியாக உயர்த்த வேண்டும், ஆண்டுக்கு பத்தாயிரம் பயனாளர்களை உருவாக்குவதை இலக்காக நிர்ணயிக்கவேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட வாரியாக விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும், நிராகரிக்கபட்டதற்கான காரணங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
