மாநில முதல்வரானால் என்ன செய்வீர்கள்? சுவாரஸ்யமாக பதிலளித்த டொவினோ தாமஸ்!
எம்புரான் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் டொவினோ தாமஸ் சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இதில் நாயகனாக மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் பேச வந்த டொவினோ தாமஸ் ஸ்டைலான ஆடையை அணிந்திருந்தார். உடனே, தொகுப்பாளர், “ஸ்டைலான முதல்வரை (எம்புரான் படத்தில் டோவினோ முதலமைச்சராக நடித்துள்ளார்) இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார்.
இதையும் படிக்க: பிரம்மயுகம் கூட்டணியில் இணைந்த பிரணவ் மோகன்லால்!
இதைக்கேட்ட டொவினோ, “இனி அடுத்த தலைமுறையில் இப்படித்தான் முதல்வர்கள் இருப்பார்கள்” என்றதும் அரங்கில் பலரும் கைதட்டினர்.
மேலும், “லூசிஃபர் படத்தில் ஒரு சில காட்சிகளில்தான் நடித்திருந்தேன். ஆனால், அப்படம் என் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் எம்புரான் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “நீங்கள் முதல்வரானால் என்னென்ன மாற்றங்களைச் செய்வீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொவினோ, “நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும். ஆனால், இது பெரிய விஷயம் என்பதால் நான் யோசித்து, திட்டமிட்டு செய்ய வேண்டியதை குறித்துவிட்டு வருகிறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்தார்.