சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.3.2025) நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த 5-3-2025 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களிலுள்ள முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடந்த 7.3.2025 அன்று கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்பது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்றும், கூட்டாட்சி கொள்கையை இது வெகுவாக பாதிக்கும் என்பதால், இப்பிரச்சினையின் அரசமைப்புரீதியான, சட்ட மற்றும் அரசியல்ரீதியான பரிமாணங்களை பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் ஒன்றாக இணைத்து ஆராய வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் உரிய தீர்வுகளை இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும், தெற்கில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களின் முறையான ஒப்புதலை அளிக்க வேண்டுமென்றும்; கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலக் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதோடு, மாநிலங்களின் பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்து, அதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக சென்னையில் நடைபெறும் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்றிடுமாறும் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்
அதனடிப்படையில், அவரின் அழைப்பினை ஏற்று, இன்று (22-3-2025) சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார்.
அதனையடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.
ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.
பின்னர், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர்டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின்ம்தியாஸ் ஜலில், கேரள காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, சமூகப் பொருளாதார நலத் திட்டங்களைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய எந்தவொரு மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்றும், மத்திய அரசு உத்தேசித்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை பல்வேறு மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளைப் பெற்று, ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினர்.
பின்னர், கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிக்க |தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம்!
என்னென்ன தீர்மானங்கள்?
மாநில முதல்வர் மற்றும் பிரதிநிதிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் செய்யவுள்ள தொகுதி மறுசீரமைப்பு பற்றிய வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு இல்லாதது குறித்து கூட்டுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் செயல்படும் மாநிலங்களின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கூட்டுக்குழு தனது பாராட்டுகளைத் தெரிவித்தது. விவாதங்களின்போது பிரதிநிதிகள் முன்வைத்த பல்வேறு கருத்துக்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், கூட்டுக்குழு ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* ஜனநாயகத்தைக் காக்க மத்திய அரசு எந்தவொரு தொகுதி மறுவரையறை பணியையும் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும், இதனால் அனைத்து மாநில அரசுகள், மாநில பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் அதுகுறித்து ஆலோசிக்கவும், விவாதிக்கவும், அதில் பங்களிக்கவும் முடியும்.
*42-வது, 84-வது மற்றும் 87-வது அரசியலமைப்புத் திருத்தங்களின் நோக்கம், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களைப் பாதுகாப்பது/ஊக்குவிப்பது ஆகும். அதனால் 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நிறுத்திவைப்பது மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
* மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி, அதன் விளைவாக மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ள மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
* இந்த குறிப்பிட்ட மாநிலங்களின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.
* மேலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்து கூட்டாக எம்.பி.க்கள் வலியுறுத்துவார்கள்.
* கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டுவர முயற்சி செய்து அதை மத்திய அரசுக்குத் தெரிவிப்பார்கள்.
* கடந்த காலத்தில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரலாறு, சூழல் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த தகவல்களை மக்களிடையே எடுத்துரைப்போம்.
இதையும் படிக்க | தொகுதி மறுசீரமைப்பு: 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு! - கனிமொழி பேட்டி