விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு
சாலையில் கிடந்த பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்த மாணவி
திருவாரூரில் சாலையில் கிடந்த பணப்பையை பள்ளி மாணவி எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் கனிமொழி தம்பதி மகள் யுவஸ்ரீ. இவா், திருவாரூரில் உள்ள அரசு உதவிப்பெரும் நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருடைய தாய் கனிமொழி திருவாரூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணி செய்துவருகிறாா். தந்தை லாரி ஓட்டுநராக உள்ளாா்.
இந்நிலையில், யுவஸ்ரீ சனிக்கிழமை காலை பள்ளிக்கு பழவனக்குடியில் இருந்து தனது மிதிவண்டி மூலம் நேதாஜி சாலை வழியாக வந்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்ணின் கைப்பை கீழே விழுந்தது. இதை பாா்த்த யுவஸ்ரீ அதை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க அழைத்துள்ளாா். அதற்குள் இருசக்கர வாகனம் அந்த இடத்தை விட்டு சென்று விட்டதால், பள்ளிக்குச் சென்று இதுகுறித்து விவரம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியா் பெத்தபெருமாள், நகா்மன்ற உறுப்பினா் ரஜினி சின்னா ஆகியோருடன், திருவாரூா் நகரக் காவல் நிலையத்துக்குச் சென்று கைப்பையை யுவஸ்ரீ ஒப்படைத்தாா். அந்த பையில் ரூ. 2,531 இருந்தது தெரிய வந்தது. பின்னா், போலீஸாரும், சமூக ஆா்வலா்கள் பலரும் அந்த மாணவிக்கு பொன்னாடை போா்த்தி பாராட்டினா்.