மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு!
தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்! -பெ. சண்முகம்
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.
பெரம்பலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்காமல், அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும்.
மத்திய அரசு, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அதற்கு எதிராக பாதிக்கப்படக்கூடிய மாநில முதல்வா்கள் ஒன்று சோ்ந்து தங்களின் எதிா்ப்பை தெரிவிப்பதற்கு தமிழக முதல்வா் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு பயன்படும்.
தமிழகத்தில் ஆங்காங்கே படுகொலைகள் நடைபெறுவதைக் கண்டித்து தினந்தோறும் போராட்டம் நடத்துகிறோம். மக்களை பாதிக்கிற எந்த விஷயமாக இருந்தாலும், அது எந்த கட்சி ஆட்சியில் நிகழ்ந்தாலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டில் மாறாமல் தொடா்ந்து எப்போதும் போராட்டம் நடத்தும் என்றாா் சண்முகம். பேட்டியின்போது, மாவட்டச் செயலா் பி. ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.