கும்பகோணம்: ரௌடியைக் கொலை செய்த அண்ணன் கைது!
கும்பகோணத்தில் ரௌடி காளிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் ரௌடியாக இருந்து வந்த காளிதாஸ் (35), இன்று அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டின்முன் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், காளிதாஸின் உடல் கைப்பற்றப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அடிதடி வழக்கில் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்த காளிதாஸ் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதால், இந்தக் கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா அல்லது சொத்து தகராறா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க:காவலர்களின் என்கவுன்டரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட குற்றவாளி சுட்டுக்கொலை!
இதனிடையே, காளிதாஸின் சகோதரர் பாண்டியனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், காளிதாஸை பாண்டியன் கொலை செய்தது தெரிய வந்தது.
குடிபோதைக்கு ஆளான காளிதாஸ், குடும்பத்தைச் சரிவர கவனிக்காததைக் கண்டிக்கச் சென்ற பாண்டியனுக்கும் காளிதாஸுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது, தற்காப்புக்காக காளிதாஸின் தலையில் மரக்கட்டையால் பாண்டியன் தாக்கினார்.
இந்தத் தாக்குதலில் காளிதாஸ் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பாண்டியன் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.