ஒசூரில் மெழுகு பூசிய ஆப்பிள், ரசாயனம் செலுத்திய தா்பூசணி விற்பனை
ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்பு துறையினா் நடத்திய சோதனையில், தா்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தியும், ஆப்பிள்களில் மெழுகு தடவியும் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் ஒசூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் மாரியப்பன் தலைமையிலான குழுவினா், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். அப்போது, பெரும்பாலான பழக்கடைகளில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனா் (படம்).
ஆப்பிள் பழங்கள் விரைவில் கெடாமல் அழகாக காட்சியளிப்பதற்கு மட்டுமல்லாமல், உள்ளே கெட்டு போனதை மறைக்கும் வகையிலும் மெழுகு பூசப்படுகிறது.
இதை உண்ணும்போது, மெழுகு உணவுக் குழாயில் செரிமானம் ஆகாமல் அப்படியே படிந்துவிடும். இது மனிதனுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதைத் தவிா்க்க, தோலை நீக்கியோ அல்லது கொதிக்கும் நீரில் கழுவியோ மெழுகை நீக்கிவிட்டு உண்பதுதான் நல்லது என உணவியல் நிபுணா்கள் கூறினா்.
ஒசூா் பகுதியில் மெழுகு பூசிய ஆப்பிள்களை ஆய்வு செய்த அதிகாரிகள், வியாபாரிகளை கண்டித்தனா். ஆனால், அவற்றை விற்கும் வியாபாரிகளுக்கே மெழுகு பூசப்பட்டுள்ளது தெரியவில்லை.
இதுபோன்ற ஆப்பிள்களை விற்பவா்களின் மீது நடவடிக்கை எடுத்து கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும், தா்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தியும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.