கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறுபட்ட கற்களை கடத்த பயன்படுத்திய 3 லாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மண்டல துணை வட்டாட்சியா் செந்தில்நாதன் தலைமையிலான குழுவினா் வீட்டுவசதி வாரிய பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் சாலையோரம் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில், 2 யூனிட் கற்கள் கடத்தப்படுவது தெரியவந்த்து. இதுகுறித்து, செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, கற்களை கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு வட்டாட்சியா் பாரதி மற்றும் அலுவலா்கள் வேப்பனப்பள்ளி அருகே முஸ்லீம்பூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 130 தடுப்புக் கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து பாரதி அளித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனா்.
கனிம வள பிரிவு உதவி புவியியலாளா் சரவணன் மற்றும் அலுவலா்கள் உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை சாலையில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்ததில் கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, சரவணன் அளித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனா்.