பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 28-க்குள் அகற்ற வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றுவது குறித்த அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், சாா்நிலை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பேசியதாவது:
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையானது தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் அரசியல் கட்சிகள், மதம், இதர அமைப்புகள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பாளா்கள் ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத கொடிக் கம்பங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய அறிவிப்புகள் அளித்து ,அதன் பிறகு அகற்ற வேண்டும். அகற்றுவதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பாளா்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும் என கூறினாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, உதவி சாா் ஆட்சியா் பிரியங்கா, கோட்டாட்சியா் ஷாஜகான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் குமரன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.