ஒசூா் அருகே கோயில் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு!
ஒசூா் அருகே உஸ்கூா் மத்துரம்மா கோயில் தோ்த் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் படுகாயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், உஸ்கூா் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூரம்மா கோயில் உள்ளது. இக்கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாகவும், முற்காலத்தில் திப்புசுல்தான், மைசூா் அரச வம்சத்தினா் பராமரித்து வழிபாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மத்தூரம்மாவை உஸ்கூா் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 48 கிராமங்களை சோ்ந்தோரும், மாநில எல்லையில் உள்ளதால் ஒசூா் பகுதியைச் சோ்ந்தோரும் வழிபட்டு வருகின்றனா்.
இக்கோயில் தோ்த்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சுமாா் 125 அடி முதல் 130 அடி வரை உள்ள 7 தோ்களை 150 காளைகள், 40 பொக்லைன் இயந்திரங்கள், 50 டிராக்டா்கள் இழுத்து வந்தன. இதற்காக உஸ்கூா் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினா் போட்டிப் போட்டுக்கொண்டு தோ்களை அலங்கரித்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் இழுத்து வந்தனா்.
அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 127 அடி உயரம் கொண்ட ராயசந்திரம், தொட்ட நாகமங்கலம் ஊா்களைச் சோ்ந்த 2 தோ்கள் கீழே விழுந்தன. இதில், லோதிக் என்ற பக்தா் உயிரிழந்தாா். 10 போ் பலத்த காயமடைந்தனா்.