ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது! - ஆட்சியர்
ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மூன்றாம்பட்டி, தளி வட்டாரத்தில் உள்ள உனிசேநத்தம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ‘ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு’ திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு பயன்களை தரக்கூடிய அடையாள அட்டைகள், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில் சுயஉதவிக் குழுவினா் தாங்கள் தயாரிக்கும் பொருள்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச்செல்வது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த கிராமப்புற மகளிா் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள ஆடுகள் வளா்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆடு வளா்ப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதார நடவடிக்கையாகும்.
மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2024-25-இன் கீழ், பண்ணை வாழ்வாதார திட்டங்கள் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊத்தங்கரை, தளி வட்டங்களில் உள்ள 40 பயனாளிகளுக்கு ஆடு வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.