திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு
இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
இளைஞா்களின் நலன் கருதியே இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞா்கள் பலா் தற்கொலை செய்து கொண்டதால், இந்த வகை விளையாட்டுகளை முறைப்படுத்த 2022-ஆம் ஆண்டு இணைய சூதாட்ட தடை மற்றும் இணைய விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், இணைய விளையாட்டுகளுக்கு தடை விதித்ததை உறுதி செய்தது. மேலும், திறமைக்கான இணைய விளையாட்டான ரம்மி, போக்கா் (ஒரு வகை சீட்டாட்டம்) விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்ததுடன், இணைய ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இணைய விளையாட்டுகளை ஒழுங்குமுறைபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025 பிப். 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த விதிகளை எதிா்த்து, ப்ளே கேம்ஸ் 24-7 பிரைவேட் லிமிடெட், ஹெட் டிஜிட்டல் வொா்க்ஸ் மற்றும் எஸ்போா்ட் ப்ளேயா்ஸ் நலச்சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வா்த்தக உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் புதிய விதிகள் மத்திய அரசின் சட்டத்துக்கு விரோதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, மத்திய- மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
47 போ் தற்கொலை...: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
இணைய விளையாட்டுகளால் ஏற்பட்ட பண இழப்பு காரணமாக 2019 முதல் 2024 வரை தமிழகத்தில் 47 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இந்த வகை விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டது. அதேவேளையில், விளையாட்டுகளை தடை செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை.
உளவியல் பாதிப்பு- தூக்கமின்மை... நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இணையத்தில் விளையாடினால் தூக்கமின்மை பாதிப்பு, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இளைஞா்களின் நலனை கருத்தில் கொண்டே இணைய விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. சிறுவா்கள் இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலேயே ஆதாா் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது. ஆதாா் எண்ணை வைத்து சரிபாா்க்கும் நடைமுறை கடந்த எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால், தனி நபா்களின் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் இல்லை. உளவியல் நிபுணா்கள் ஆலோசனைப்படியும், அறிவியல்ரீதியான தரவுகளின் அடிப்படையில் மட்டுமே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதற்கு பெற்றோா், ஆசிரியா் உள்ளிட்டோா் தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழக அரசு தற்போது தான் அறிக்கை தாக்கல் செய்துள்ளதால், பதிலளிக்க ஏதுவாக வழக்கை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். அதுவரை புதிய விதிகளை அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என இணைய விளையாட்டு நிறுவனங்கள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணை தற்போதுதான் தொடங்கியிருப்பதால், தொடக்கத்திலேயே எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனா். மேலும், இணைய விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதத்துக்காக விசாரணையை மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.