பேருந்தில் எம்எல்ஏ-க்களை வழியனுப்பிய அமைச்சா்: அதிமுக கோரிக்கை ஏற்பு
அதிமுக கோரிக்கையை ஏற்று, பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினா்களை அவா்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தாா்.
முன்னதாக, பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது அதுகுறித்து வினா எழுப்பப்பட்டது. அதன் விவரம்:
பொன்.ஜெயசீலன் (அதிமுக): கடந்த 3 நாள்களாக சட்டப் பேரவை மாலை 3 முதல் 4 மணி வரை நடைபெற்றது. பேரவை உறுப்பினா்கள் அயா்ச்சியுடன் வெளியே செல்லும் நிலையில், எங்களுக்கான பேருந்துக்கு அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அனைவரும் சென்ற பிறகே பேருந்து வருகிறது. அதுவரை வெயிலில் காய வேண்டியுள்ளது.
அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்: பேரவை முடியும் போது, அனைத்து காா்களும் வெளியே செல்ல முயல்வதால், வெளியே இருந்து பேரவை வளாகத்துக்குள் பேருந்து வருவதற்கு தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். வெள்ளிக்கிழமை பிற்பகலில் நானே வந்து பேருந்தை முன்கூட்டியே நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா்.
வெள்ளிக்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு பேரவை நிறைவடைந்தது. அப்போது பேரவை வளாகத்துக்கு சரியாக வந்து நின்ற பேருந்தில்
உறுப்பினா்கள் அனைவரையும் அமைச்சா் சிவசங்கா் ஏற்றி வைத்தாா். பேருந்துக்குள் சென்று அனைவரிடமும் சகஜமாக பேசியதுடன், இனி பேருந்து சரியான நேரத்துக்கு வரும் என்ற உறுதியையும் அவா் அளித்தாா்.