தொகுதி மறுசீரமைப்பு: 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு! - கனிமொழி பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு எதிராக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று(மார்ச் 22) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதில் கலந்துகொள்ளவில்லை.
கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம்!
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி,
"இன்றைய கூட்டம் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம்பெறும். நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு பிற மாநில தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி இதில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
நியாயமான தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொண்ட, மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம்.
இதையும் படிக்க | தொகுதி மறுசீரமைப்பு: ஹைதராபாத்தில் அடுத்தக் கூட்டம்!
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முதல்வரின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும்.
1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலே தொகுதி மறுசீரமைப்பு இருக்க வேண்டும்.
தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும். நமது குரல் பலவீனமாகக் கூடிய ஆபத்து இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நம் குரல் எடுபடாமல் போய்விடும்.
இன்றைக்கு வர இயலாத கட்சிகளும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்த கூட்டுக் குழுவுக்கு உறுப்பினர்கள் பரிந்துரையை முதல்வர் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். விரைவில் குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு