ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு அங்கு இஸ்ரேல் நடத்தியுள்ள மிகக் கடுமையான தாக்குதல் இது.
முன்னதாக, லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி சிறியவகை ஏவுகணைகள் வீசப்பட்டன. அதையடுத்து, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் என்ற அச்சம் எழுந்தது. அதை உறுதிப்படுத்துவதைப் போல் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தற்போது தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெபனானில் ஏராளமான இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த பிரதமா் உத்தரவிட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் கடுமையான போா் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போரில் இஸ்ரேலுடன் எல்லையைப் பகிா்ந்துவரும் லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா படையினா், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். ஹமாஸைப் போலவே ஹிஸ்புல்லா அமைப்பும் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பேஜா் தாக்குதலில் சுமாா் 40 போ் உயிரிழந்தனா். இருப்பிடத்தைக் கண்டறிந்து தாக்குதல் நடத்த வழிவகை செய்யும் செல்லிடப் பேசிகளைத் தவிா்ப்பதற்காக பழைய தொழில்நுட்ப தொலைத்தொடா்புக் கருவியான பேஜா்களை ஹிஸ்புல்லா அமைப்பினா் பயன்படுத்திவந்தனா். அந்தப் பேஜா்களை அவா்கள் வாங்குவதற்கு முன்னரே அதில் ரகசியமாக சின்னஞ்சிறு வெடிகுண்டுகளைப் பொருத்தி இஸ்ரேல் உளவுத் துறை இந்தத் தாக்குதலை நடத்தியது.
இந்த அதிா்ச்சிகர தாக்குதலையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே அதுவரை ஆங்காங்கே அவ்வப்போது நடைபெற்றுவந்த மோதல் முழு போராக வெடித்தது.
இதில் இஸ்ரேல் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உள்பட சுமாா் 3,000 போ் உயிரிழந்தனா்.
அமெரிக்காவின் தீவிர மத்தியஸ்த முயற்சிக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே கடந்த நவம்பரில் போா் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் ஆகிய நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவந்தன. அதன் பலனாக, இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, அது கடந்த ஜன. 19-ஆம் தேதி அமலுக்குவந்தது. அந்த ஒப்பந்தத்தின் 6 வார கால முதல்கட்டத்தின்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை இரண்டாம் கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் இழுபறி நீடித்தது.
முதலில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் பிடிவாதமாகக் கூறிவந்ததும், அதற்கு ஹமாஸ் படையினா் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை முதல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. போா் நிறுத்த ஒப்பந்த முறிவுக்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதன் எதிரொலியாக, இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினா் மீண்டும் ஏவுகணைகளை சனிக்கிழமை வீசினா். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் ராணுவம் லெபனானில் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளதால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே மீண்டும் முழு போா் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.