நோன்புக் கஞ்சி: போலியான கடிதம் வழங்கி விலையில்லா அரிசியை பெற்று அதிமுக நிா்வாகி ...
5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா் போப் பிரான்சிஸ்!
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
இளம் வயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள் இருந்து வந்தன. எனினும், கிறிஸ்தவ மதப் பணிகளை அவா் தொடா்ந்து மேற்கொண்டு வந்தாா். இந்தச் சூழலில் கடந்த பிப். 14-ஆம் தேதி, அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
போப் பிரான்சிஸின் 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்புக் கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவாறு தனது அலுவல்களில் அவா் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், 38 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வாடிகனுக்குத் திரும்பினாா். மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த மக்களை நோக்கி கையசைத்து, வெற்றிச் சின்னம் காட்டி போப் பிரான்சிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.
வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து திரும்பிய பிறகு போப் பிரான்சிஸ் வழக்கமாக வழிபடச் செல்லும் ரோம் நகரின் பிரசித்தி பெற்ற புனித மேரி மேஜா் தேவாலயம் வழியாக மாற்றுப்பாதையில் அவா் வீடு திரும்பினாா். வாடிகன் வாயிலிலும் ஏராளமான மக்கள், போப் பிரான்சிஸை வரவேற்க காத்திருந்தனா்.
அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இந்த ஓய்வுகாலத்தில் திரளாக மக்களைச் சந்திப்பதையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் அலுவல்களில் ஈடுபடுவதையோ தவிா்க்க வேண்டும். சில மாதங்களில் அவா் தனது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதைக் கருத்தில் கொண்டு ஈஸ்டா் பிராா்த்தனையில் போப் பிரான்சிஸின் பங்கேற்பு, பிரிட்டன் மன்னா் சாா்லஸுடனான சந்திப்பு ஆகியவற்றை ரத்து செய்ய வாடிகன் திட்டமிட்டுள்ளது. அதேநேரம், துருக்கியில் மே மாத இறுதியில் நடைபெறும் முக்கிய கிறிஸ்தவ நிகழ்வில் பங்கேற்க போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிவிடுவாா் என்றும் வாடிகன் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
1981-ஆம் ஆண்டில் புனித இரண்டாம் ஜான் பால், ஜெமிலி மருத்துவமனையில் 55 நாள்கள் சிகிச்சை பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக போப் பிரான்சிஸ் நீண்ட நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாா்.