தேசிய சாதனை படைத்த இந்திய வீரர்! 22 மில்லி செகன்டில் இழந்த உலக சாம்பியன்ஷிப் தகு...
சாலையை சீரமைக்கக் கோரி பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள்
திருப்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி பாடை கட்டும் போராட்டத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஈடுபட முயன்றனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி முதல் கோவில்வழி வரையில் உள்ள 5 கிலோ மீட்டா் தொலைவுள்ள மாநில நெடுஞ்சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தாா் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது.
ஆனால், அந்த சாலை மூடப்படாததால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பாடை கட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, பூங்கா நகா் பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோா் திரண்டனா். மேலும், பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவா்களைத் தடுத்து நிறுத்திய வீரபாண்டி காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்தப் பேச்சுவாா்த்தையில் 10 நாள்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா். மேலும், மாநகராட்சி நிா்வாகம் உறுதியளித்தப்படி சாலையை சீரமைக்காவிட்டால் பொதுமக்களைத் திரட்டி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்தனா்.