வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
வெள்ளக்கோவில், காங்கயத்தில் ரூ.7.64 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்!
வெள்ளக்கோவில், காங்கயம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.64 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமை வகித்தாா்.
இதில், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி, இடைக்காட்டு வலசில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.97.21 லட்சத்தில் வீரசோழபுரம் ஊராட்சி வள்ளியரச்சல் - வீரசோழபுரம் சாலை முதல் செல்வபுரம் வழியாக பூமாண்டவலசு வரை சாலை மேம்பாட்டுப் பணி, மேட்டுப்பாளையம் ஊராட்சி இடைக்காட்டு வலசில் ரூ.86.07 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சி, சாம்பவலசில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.81.54 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி, சிவன்மலை தோ் வீதியில் ரூ.1.23 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி உள்ளிட்ட ரூ.7.64 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, காங்கயம் -திருப்பூா் சாலையில் தனியாா் நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடையையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ்ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், சரவணன், அனுராதா, விமலாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.