அமெரிக்க தோ்தல் முறை சீரமைப்பு: இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்
நியூயாா்க்: அமெரிக்க தோ்தல் முறையை சீரமைப்பதற்கான நிா்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபா் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டினாா்.
அந்த உத்தரவில், ‘தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடிப்படையான மற்றும் தேவையான விஷயங்களை அமல்படுத்த அமெரிக்கா தவறியுள்ளது.
இந்தியாவும், பிரேஸிலும் வாக்காளா் அடையாள அட்டைகளை பயோமெட்ரிக் தரவுதளத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்க குடியுரிமைக்காக ஒருவா் விண்ணப்பித்தால், அந்த நபா் மட்டுமே சுயசான்றளித்து உறுதியளிக்கும் முறையைத்தான் அமெரிக்கா பெரிதும் நம்பியுள்ளது’ என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்க தோ்தல்களில் வாக்குப் பதிவு செய்வதற்கு அந்நாட்டு குடியுரிமை பெறப்பட்டதற்கான ஆதாரச் சான்றை அவசியமாக்குதல், தோ்தல் நாளுக்குப் பிறகும் தபால் வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, வாக்குப் பதிவுக்கு முன்பு பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை அவரின் உத்தரவு நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்க தோ்தல் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு வாக்குப் பதிவு முறைக்கான வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யுமாறு அந்நாட்டு தோ்தல் உதவி ஆணையத்துக்கு அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தோ்தல்களுக்கு வெளிநாட்டவா்கள் நன்கொடை அளிப்பதையும் அந்த உத்தரவு தடை செய்துள்ளது.