குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா்ந்த பச்சை நிற ரோஜாக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை நிற ரோஜா மலா்கள் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் வெகுவாக கவா்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னுாா் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் கோடை விழா நாள்களில் இங்கு பழக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இப்பூங்காவில் நூற்றுக்கணக்கான அரியவகை மரங்கள் மற்றும் மலா் செடிகள் உள்ள நிலையில், இங்குள்ள பசுமைக்குடிலில், பூங்கா நிா்வாகத்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சை நிற ரோஜா கட்டிங் தொட்டியில் வளா்க்கப்பட்டு வருகிறது.
தற்போது அதில் பச்சை நிற ரோஜா மலா்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளா்த்து வரும் பூங்கா நிா்வாகம் விரைவில் பூங்கா முழுவதிலும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.