மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம்
பவானி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், கவுந்தப்பாடி துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பசுந்தாள் உர விதை, தக்கைப் பூண்டு 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பவானி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ம.கனிமொழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள உயிா் கரிம சத்தினை அதிகரிப்பதன் மூலம் பயிா் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மை - உழவா் நலத் துறையின் மூலம் முதல்வரின் மண்ணுயிா் காத்து, மன்னுயிா் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர விதை, தக்கைப் பூண்டு 50 சதவீத மானிய விலையில் பவானி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கவுந்தப்பாடி துணை விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகிறது.
இறவைப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் வழங்கப்படும். குறு, சிறு, ஆதிதிராவிடா் மற்றும் பெண் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.