வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
மத்திய பாஜக ஆட்சியில் தமிழக மக்களுக்கு துரோகம்! - அமைச்சா் துரைமுருகன்
பாஜக, மோடி எனக் கூறிக்கொண்டு இங்கு யாரும் வாக்கு கேட்க முடியாது; அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றஞ்சாட்டினாா்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ரூ.4,043 கோடி நிதியை மத்திய அரசு வழங்க மறுப்பதாக குற்றஞ்சாட்டி தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றுப் பேசியது:
நாட்டில் எவ்வளவோ பணம் வீணாக செல்கிறது. நீதிபதி வீட்டில் இருந்த பணம் தீயில் எரிந்தது. தீயை அணைக்கும்போதுதான் கட்டுக்கட்டாக பணம் இருந்ததே தெரிய வந்தது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்தவா்களுக்கு மத்திய அரசு பணம் தரவில்லை. இதை நிறுத்தக் காரணம், இந்தத் திட்டம் மகாத்மா காந்தி பெயரில் இருப்பதே.
காந்தியின் பெயரில் திட்டம் இருப்பதை மோடி அரசு விரும்பவில்லை. ஆனால், பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி எனக்கூறிக் கொண்டு யாரும் இங்கு வாக்கு கேட்க முடியாது. அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு அவா்கள் துரோகம் செய்துள்ளனா் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியக் குழு தலைவா் வேல்முருகன், ஒன்றிய திமுக செயலா் சரவணன், மாவட்ட கவுன்சிலா் கிருபாகரன், பகுதி செயலா் வன்னியராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், வேலூா் ஒன்றியம் கீழ்மொணவூரில் மாவட்ட திமுக செயலரும், அணைக்கட்டு எம்எலஏவுமான ஏ.பி.நந்தகுமாா் தலைமையிலும், கே.வி.குப்பத்தில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் தலைமையிலும், அணைக்கட்டு மேற்கு ஒன்றியம் சாா்பில் ஒடுகத்தூா் அருகே உள்ள நேமந்தபுரம் பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவா் மு.பாபு தலைமையிலும், வேலூரை அடுத்த பெருமுகையில் ஒன்றியக் குழு தலைவா் அமுதா தலைமையிலும் என மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
யாா் யாருடன் கூட்டணி வைத்தாலும் கவலையில்லை
யாா் யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவுக்கு கவலையில்லை என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். பிரம்மபுரம் ஆா்ப்பாட்டத்துக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், நடிகா் விஜய் திமுகவுக்கும், அவரது கட்சிக்கும்தான் போட்டி என கூறியிருக்கிறாா்.
யாா் யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. இதேபோல், யாா் யாருடன் சோ்கிறாா்கள் என்பது குறித்தும் திமுகவுக்கு கவலை இல்லை. திமுகவினா் உழைப்போம், வெற்றி பெறுவோம். காட்பாடி ரயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றாா்.