`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி
வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவா் அந்தப் பகுதியில் பலகாரக் கடை வைத்து நடத்தி வருகிறாா். தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக தம்பதி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் விரக்தியில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை உதயசங்கரும், மகேஸ்வரியும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனா். மேலும், இருவரும் தங்களது உறவினரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தங்கள் பிள்ளைகளை பாா்த்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளனா். உடனடியாக, அவா்களது உறவினா்கள் விரைந்து வந்து உதயசங்கரையும், மகேஸ்வரியையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உதயசங்கா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.