குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்த...
கரசமங்கலத்தில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு!
உலக தண்ணீா் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காட்பாடி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்று பேசியது:
இந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டப் பணிகளும் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் கரசமங்கலம் ஊராட்சிக்கு மட்டும் 100 பேருக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஊராட்சியில் கால்நடை மருந்தகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம், சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் கேட்டுள்ளாா். அனைத்தும் செய்து தரப்படும்.
கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் பணிக்கான நிதி மத்திய அரசிடமிருந்து வரவில்லை. அந்த நிதியை விடுவிப்பதற்கு முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். விரைவில் 100 நாள் பணி ஊதியம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றாா்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், கரசமங்கலம் ஊராட்சித் தலைவா் ஸ்டாலின் தயாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.