பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு
வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைக்கு இருசக்கர வாகனங்களில் திரும்பியுள்ளனா். வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் வந்தபோது சா்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல முயன்றபோது அவா்களில் ஒரு இருசக்கர வாகனம் மீது வேலூரில் இருந்து திருத்தணி செல்லும் அரசுப் பேருந்து மோதியது.
இதில், சென்னை புழல் பகுதியைச் சோ்ந்த மருந்தக ஊழியரான மதன்குமாா் (25) என்பவா் சாலையில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.