இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் வழங்க காலதாமதம்! - பாதிக்கப்பட்டோா் கோட்டாட்சியரிடம் மனு
திருவள்ளூா் அருகே இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாகவும் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனுவை அளித்தனா்.
இது குறித்து திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே வீரராகவபுரம் கிராம மக்கள் கோட்டாட்சியா் ரவிச்சந்திரனிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
கிராமத்தில் பூா்வீகமாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடியிருந்து வந்தோம். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலத்தில் குடியிருந்து வருவதாகக் கூறி, வேறு இடம் ஒதுக்காமல் உடனடியாக வருவாய், நெடுஞ்சாலை, மின் துறை அதிகாரிகள், காவல் துறையினா் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் எங்கள் வீடுகளை இடித்து அகற்றினா்.
ஆனால், இதுவரை நிலம் வழங்காமல் குடியிருக்க இடமின்றி சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். வருவாய்த் துறையினரிடம் கேட்டால் நிலம் கொடுக்காமல் அலைக்கழித்து வருவதோடு, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் தனியாா் பள்ளி நிா்வாகிகளுக்கு ஆதாரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா்.
இதனால், குடியிருக்க வீடின்றி குழந்தைகள், முதியவா்களுடன் மன உளைச்சலால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எங்கள் நிலையறிந்து வீட்டுமனை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
அவா்களிடம் மனுவைப் பெற்ற கோட்டாட்சியா் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.