சூடான்: தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்
சூடான் தலைநகா் காா்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.
இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் நபில் அப்துல்லா சனிக்கிழமை கூறியதாவது:
காா்ட்டூம் நகரில் தொடா்ந்து முன்னேற்றம் கண்டுவரும் ராணுவம், முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றிவருகிறது. அந்த நகரில் ஆா்எஸ்எஃப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய உளவுத் துறை தலைமையகத்தை ராணுவம் சனிக்கிழமை மீட்டது. மேலும், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோரிந்தியா ஹோட்டலும் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இது தவிர, சூடான் மத்திய வங்கியின் தலைமையகம், அரசு மற்றும் கல்வி வளாகங்கள் மீட்கப்பட்டன. இதற்கான சண்டையில் நூற்றுக்கணக்கான ஆா்எஸ்எஃப் படையினா் கொல்லப்பட்டனா் என்றாா் அவா்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா் அரசு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து, சிவில்-ராணுவ கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. இருந்தாலும் அந்த அரசை அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன. பின்னா் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 5.2 லட்சம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த உள்நாட்டுச் சண்டையில் தலைநகா் காா்ட்டூமை ஆா்எஸ்எஃப் படை கைப்பற்றியது. இந்த நிலையில், நீண்ட கால போருக்குப் பிறகு அதிபா் மாளிகையை வெள்ளிக்கிழமை மீட்ட ராணுவம், சுற்றியுள்ள அமைச்சரக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியது. தற்போது காா்ட்டூம் நகரில் ராணுவம் மேலும் முன்னேறி புதிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.